உலகம்

'திரும்பப்பெறப்பட்ட அவசர நிலை; அத்தியாவசிய தேவையில் மக்கள்' - இலங்கையில் அரசியல் குழப்பம்

JustinDurai

இலங்கையில் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டில் அரசியல் குழப்பம் காரணமாக ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்களை பார்க்கலாம்.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே இலங்கையில் அடுத்தடுத்த அரசியல் திருப்பம் நடைபெற்று வருகிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் இருந்த அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நிலைமையை கையாளும் விதமாக 4 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. அதில், புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றுக் கொண்டார். ஆனால் பதவியேற்ற 24 மணி நேரத்தில் அவர் தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வரலாறு காணாத நிதி நெருக்கடியை சமாளிக்க இடைக்கால ஏற்பாட்டை செய்யுமாறு அவர் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெருமுன கட்சி பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கையான 225இல் 113 உறுப்பினர்களின் ஆதரவு ஆளும் கட்சிக்கு இருக்க வேண்டும். ஆனால் ஆளும்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 42 எம்பிக்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளதால், 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற பெரும்பான்மை நிலையை இழந்துள்ளது ராஜபக்சேவின் கட்சி.

அரசுக்கு பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவு இல்லை என்றாலும் அரசு உடனடியாக கவிழாது. அரசியலமைப்பு நடைமுறைகள் அடிப்படையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். ஜனாதிபதிக்கு உச்சபட்ச அதிகாரங்கள் வழங்கும் 20ஆவது சட்டத்தை திரும்ப பெற தீர்மானம் கொண்டு வந்து அதை முதலில் வெற்றிபெற வைத்து, அதனை தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.

இதனிடையே மக்களின் இயல்பு வாழ்க்கை, நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஒரு புறம் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் என எரிபொருட்கள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலில், மறுபுறம் அரசைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச வீடு முன்பு, மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சூழலில் பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதிக்க அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “போராடும் மக்களை எதிரிகளாக பார்க்கக் கூடாது” - அரசுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வீரர்கள்