ind - pak indus river google gemeni
உலகம்

“சண்டைக்குத் தயார்..” தண்ணீரால் தவிக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவுக்குச் சவால்!

இது, அந்நாட்டின் விவசாயம், நீர்ப்பாசன அமைப்பு மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது.

Prakash J

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் தண்ணீர் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், அந்நாடு இந்தியாவுக்கு பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு, ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளே காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியது. மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் அரசு நம்பகமான மற்றும் மாற்றமுடியாத நடவடிக்கையை எடுக்கும்வரை, 1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் உருவான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

சிந்து நதி

இந்த ஒப்பந்தம், சிந்து நதி அமைப்பின் நீரைப் பகிர்வதை நிர்வகிப்பதோடு, அதன் படுகையின் நீரில் ஏறக்குறைய 80 சதவீதத்தை பாகிஸ்தானுக்கு ஒதுக்குகிறது. இது, அந்நாட்டின் விவசாயம், நீர்ப்பாசன அமைப்பு மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது.

தற்போது இந்திய அரசால் சிந்து நதி நீர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. அதேநேரத்தில், இதன்மூலம் கிடைக்கும் உபரி நீரை 113 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் தோண்டி காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா ஆசிப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குவாஜா ஆசிப்

“நதிப் பகிர்வு ஒப்பந்தத்தின்கீழ் நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ இந்தியா நடவடிக்கை எடுத்தால், அந்நாட்டின் மீது பாகிஸ்தான் போர் தொடுக்கும்” என அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறுவதாகக் கூறி, அதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலையீட்டைக் கடந்த வாரம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம், அணு ஆயுதங்களைக் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது.