அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து, அவரது அரசு நிர்வாகத்தில் அமைச்சர்கள், உயர் பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ட்ரம்ப்பின் நண்பரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் ஆகியோருக்கு, ட்ரம்ப்பின் புதிய அரசு நிர்வாகத்தில் அரசின் செயல்திறன் துறைக்கு தலைமைப் பதவி தரப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசின் செலவினத்தில் மிகப்பெரிய அளவில் நடக்கும் வீண்செலவையும், முறைகேட்டையும் அவர்கள் தடுப்பார்கள் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், ”எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் குடியரசுக் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட டொனல்டு ட்ரம்ப்விடம், ”உங்களது நிர்வாகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்த உள்ள உலகப் பணக்காரர் எலான் மஸ்க் ஒருநாள் அதிபராக முடியுமா” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “இல்லை, அது நடக்காது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”அவர் ஏன் இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர், இந்த நாட்டில் பிறக்கவில்லை” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
’பிரசிடெண்ட் மஸ்க்’ எனக் குறிப்பிட்டு ஒரு கூட்டம் சமூக வலைதளத்தில் வைரல் செய்துவந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது ட்ரம்ப் காதுவரை சென்றுள்ளது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஓர் அதிபர் இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் உலகப் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் ஆவார். அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர் என்று பைடன் நிர்வாகம் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அரசு நிதியுதவி திட்டத்துக்கு எதிராக மஸ்க் போர்க்கொடி தூக்கியுள்ளதும் ட்ரம்பின் ஜனநாயக கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.