கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஓகானகன் ஏரியைச் சுற்றி காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி, அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மர்லேண்ட், பீச்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 20,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 100 அடி உயர மரங்களை விழுங்கும் தீ 200 அடி வரை எரிந்து மின்னல் உருவாகும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளது.
செய்தியாளர் - M. மீரா
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவி வருவதால், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஓகனகன் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்மர்லேண்ட் மற்றும் பீச்லேண்ட் உள்ளிட்ட நகரங்களுக்கு காட்டுத்தீ பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தீயின் வேகம் மற்றும் தீவிரம் குறித்து விளக்கிய மாகாண முதல்வர் டேவிட் ஈபி, தீயணைப்பு அதிகாரி ஒருவர் காட்டுத்தீயின் சீற்றத்தை “அணுகுண்டு வெடித்ததைப் போல” மிகவும் பயங்கரமாக இருப்பதாக விவரித்ததாகத் தெரிவித்தார்.
சுமார் 100 அடி உயர மரங்களில் பற்றியுள்ள தீ, மேலும் 200 அடிகளுக்கும் அதிகமாக உயர்ந்து எரிவதாகக் கூறப்படுகிறது. இந்த அளவுக்கு தீ தீவிரமாக எரிவதால், அதற்கென தனியான வானிலை அமைப்பு உருவாகி, மின்னல் உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய ‘பால்ட் ரேஞ்ச்’ காட்டுத்தீ, சில மணி நேரங்களிலேயே சுமார் 9,500 ஹெக்டேர் (23,500 ஏக்கர்) பரப்பளவுக்கு வேகமாகப் பரவியுள்ளது. தீயில் பல வீடுகள் மற்றும் சொத்துகள் சேதமடைந்துள்ளன. சாலையின் இருபுறமும் தீப்பற்றி எரிந்ததால், அங்கு சிக்கிய பொதுமக்களை மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டுள்ளனர்.
மேலும், காட்டுத்தீ சூழ்ந்த பகுதியில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் 100-க்கும் மேற்பட்டஇடங்களில் காட்டுத்தீ தற்போது தீவிரமாக எரிந்து வருகின்றன. கோடைகால வெப்ப அலை மற்றும் பலத்த காற்று தீயின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளன. இதனால் சில பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்துமாறும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.