wildfire wildfire in spain
உலகம்

ஸ்பெயின், பிரான்ஸில் காட்டுத்தீ பேரழிவு.. இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் ஆபத்து!

ஐரோப்பா முழுவதும் வெப்ப அலை, பலத்த காற்று காரணமாக கட்டுக்கடங்கா காட்டுத்தீயால் ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் வனங்கள் சாம்பலாகி, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Rishan Vengai

ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காட்டுத்தீ பரவி, பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகள் சாம்பலாகியுள்ளன. ஸ்பெயினில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, ராணுவம் களமிறங்கியுள்ளது. பிரான்ஸில் 1.60 லட்சம் ஹெக்டேர் எரிந்து, இரண்டாம் உலகப்போருக்குப் பின் மிகக் கடுமையான பேரழிவாக மதிக்கப்படுகிறது.

ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினின் மாட்ரிட் மற்றும் ஆண்டலூசியா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகள் சாம்பலாகியுள்ளன. அங்கு பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

wildfire Spain

நிலைமையைச் சமாளிக்க அந்நாட்டு ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதேபோல, பிரான்ஸின் தென்பகுதியில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. "இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பிரான்ஸ் சந்திக்கும் மிகக் கடுமையான பேரழிவு இது" என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கவலை தெரிவித்துள்ளார்.

கிரீஸின் கிரீட் தீவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 3 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் போர்ச்சுகல், துருக்கி, இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் காட்டுத்தீ வீடுகளையும் இயற்கை வளங்களையும் அழித்து வருகிறது. வெப்ப அலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்த சர்வதேச தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.