உலகம்

‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை

webteam

பாலியல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் அளித்த ஜாமீன் நிபந்தனைகளை மீறிய வழக்கில் ‘விக்கிலீக்ஸ்’ அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் 50 வாரங்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. 

‘விக்கிலீக்ஸ்’ என்ற செய்தி நிறுவனம் மூலம் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளின் ஆவணங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அசாஞ்சே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில், அவர் மீது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார். 7 ஆண்டுகளாக அவர் அங்கு தங்கியிருந்த நிலையில், அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை ஈக்வடார் நாடு திரும்பப்பெற்றது. இதையடுத்து, லண்டன் போலீஸார் ஜூலியன் அசாஞ்சேவை கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி கைது செய்து, லண்டன் மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே ஜாமீன் நிபந்தனைகளை மீறிய குற்றத்துக்காக லண்டன் நகரில் உள்ள சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று யாராலும் தொடர்புகொள்ள முடியாதபடி ஜாமீன் நிபந்தனைகளை நீங்கள் மீறி வந்திருக்கிறீர்கள் என அசாஞ்சே மீது நீதிபதி குற்றம்சாட்டினார்.

இதற்கு கடிதம் மூலமாக பதிலளித்த அசாஞ்சே, பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளுக்குள் சிக்கி சிரம்படும் நான் இந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதினால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் எனத் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.