உலகம்

ஆஸி.யின் பெண் சீரியல் கில்லர்... மன்னிப்பு வழங்கக் கோரும் விஞ்ஞானிகள்... ஏன்?

ஆஸி.யின் பெண் சீரியல் கில்லர்... மன்னிப்பு வழங்கக் கோரும் விஞ்ஞானிகள்... ஏன்?

webteam

'ஆஸ்திரேலியாவின் மோசமான பெண் தொடர் கொலையாளி' என்று அழைக்கப்படும் கேத்லீன் ஃபோல்பிக்குக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், அந்நாட்டு விஞ்ஞானிகளும், மருத்துவ வல்லுநர்களும். 1990-க்கும் 1999-க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் தனது 4 குழந்தைகளை கொன்றதற்காக 2003 ஆம் ஆண்டில் ஃபோல்பிக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அவர் 'சிரியல் கில்லர்' என்று அடையாளப்படுத்தப்பட்டார்.

இருப்பினும், 90 விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழுவைப் பொறுத்தவரை, ஃபோல்பிக் ஓர் அப்பாவி. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ஃபோல்பிக் கொன்றதாக கூறும் அவரது 4 குழந்தைகளும், அரிதான மரபணு மாற்ற நோய்களுக்கு ஆளாகி இயற்கையாகவே இறந்திருக்கலாம் என குறிப்பிட்டிருந்தனர். மேலும், நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் மார்கரெட் பீஸ்லியிடம் "ஃபோல்பிக்குக்கு எதிரான அநீதியை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அது மனித உரிமைகளுக்கு எதிரானது" என்று நிபுணர்கள் வலியுறுத்தினர்.

அவர்களின் வாதம் ஃபோல்பிக்-ன் இரண்டு குழந்தைகள் அவரிடமிருந்து பதிவு செய்யப்படாத மரபணு மாற்றத்தை பெற்றதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அவர்களின் மரணத்திற்கு, இது காரணமாக அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கேத்லீன் ஃபோல்பிக் யார்?

53 வயதான ஃபோல்பிக், கடந்த 2003-ம் ஆண்டு நடந்த ஏழு வார விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். அவர் தனது நான்கு குழந்தைகளான காலேப், பேட்ரிக், சாரா மற்றும் எலிசபெத் ஆகியோரை பத்து வருட காலப் பகுதியில் விரக்தியடைந்த தருணங்களில் கொலை செய்துள்ளதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

1991-ம் ஆண்டு 8 மாத குழந்தையாக இருந்த அவரது மகன் பேட்ரிக் மரணத்திற்கு கை-கால் வலிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. மற்ற இரண்டு குழந்தைகளான சாரா மற்றும் காலேப்பின் திடீர் இறப்பு, SIDS என்று அழைக்கப்படும் நோய் பாதிப்பால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. 1999 ஆம் ஆண்டு குழந்தை லாரா தனது 19 மாதத்திலேயே இறந்தார். ஆனால், இந்த மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

ஃபோல்பிக் எப்போதுமே தனக்குள் ஓர் அப்பாவித்தனத்தை தேக்கி வைத்திருந்தார். மேலும் குற்றம்சாட்டபட்டபோது, இயற்கை மரணங்களால்தான் தனது குழந்தைகள் இறந்தன என்பதை வலியுறுத்தினார். அவரது குழந்தைகளை இறந்தபோது இருந்த சூழ்நிலைகள் மற்றும் அவர் வைத்திருந்த குறிப்புகளை அடிப்படையாக கொண்டுதான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1997-ம் ஆண்டு அவரது மகள் லாரா பிறந்தபோது ஃபோல்பிக் எழுதிய குறிப்பில், "சாராவைப் போன்ற இன்னொன்றைக் கையாள முடியாது. அவள் மிகவும் நல்ல குணமுள்ள குழந்தை. தேங்க் காட். அவளுடைய உடன்பிறப்புகளின் தலைவிதியிலிருந்து காப்பாற்றபடுவாள்" என்று எழுதியிருந்தார்.

மேலும், "சாராவிடம் நான் விரும்பியதெல்லாம் அவள் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஒரு நாள் அவள் அதை செய்தாள்" என்றும் எழுதியிருந்தார். இது குறித்து ஃபோல்பிக் தனது விசாரணையின் போது எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இது அவரைப் பற்றிய பொதுக்கருத்தை உறுதிபடுத்துவதாக அமைந்தது.

2019-ம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் விசாரணையை அறிவித்தது. நீதிபதி ரெஜினோல்ட் பிளான்ச் தலைமையில் நடந்த வழக்கு விசாரணை, அவரது தண்டனையை உறுதி செய்தது. 500 பக்க அறிக்கையில், பிளான்ச் கூறுகையில், "காத்லீன் ஃபோல்பிக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களுக்கு எதிராக எனக்கு எந்தவொரு நியாயமான சந்தேகமும் எழவில்லை" என்று கூறி தண்டனையை உறுதிபடுத்தினார்.

ஆனால் ஃபோல்பிக்-கின் வக்கீல்கள், கொலை போன்ற தீவிரமான குற்றங்களுக்கான தண்டனையை சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு வழங்க முடியாது என வாதிட்டனர். ஃபோல்பிக் வழக்கு லிண்டா சேம்பர்லினுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. லிண்டா தனது குழந்தை அசாரியாவின் கொலைக்கு தண்டனை பெற்ற 32 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னித்து விடுவிக்கப்பட்டார்.

ஃபோல்பிக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழு, அவரது குழந்தைகள் ஓர் அரிய மரபணு குறைபாடு காரணமாக இறந்துவிட்டதாக வாதிட்டனர். இக்குழு மருத்துவ மற்றும் மரபணு கோளாறுகளில் குறிப்பிடத்தக்க நிபுணர்களைக் கொண்டுள்ளது. இதில் நோபல் பரிசு பெற்ற பீட்டர் டோஹெர்டி, நோபல் பரிசு வென்ற எலிசபெத் பிளாக்பர்ன் மற்றும் பியோனா ஸ்டான்லி ஆகியோர் இருப்பதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோல்பிக் மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் முழு மரபணு வரிசைமுறை அடிப்படையாக கொண்டு ஃபோல்பிக் விடுவிக்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. சாரா மற்றும் லாரா இருவரும் தங்கள் தாயிடமிருந்து CALM2 எனப்படும் மரபணு மாற்றத்தை பெற்றிருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, CALM-2 மரபணு மாற்றம் மாரடைப்பு காரணமாக திடீர் மரணத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. ஃபோல்பிக்கின் மகன்களான காலேப் மற்றும் பேட்ரிக்கின் மரபணுக்கள் வேறுபட்ட மரபணு மாற்றத்தைக் கொண்டிருந்தன. இந்த மாற்றங்கள்தான் அவர்களின் இறப்புக்கு காரணமாக அமைந்திருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். பேட்ரிக் பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு கால்-கை வலிப்பு இருப்பது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் காலேப் என்ற குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவற்றின் மரபணுக்கள் தொடர்பாக மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.