விடுதலை பெற்ற நாடாக பலராலும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வரும் "பிர் டவில்" பிராந்தியம் எப்படி உருவானது? அதை ஏன் எந்தநாடும் உரிமை கோரவில்லை.
எந்த நாடும் உரிமை கோராத "பிர் டவில்", சூடானுக்கும் எகிப்துக்கும் இடையே சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட எல்லைக் கோடுகளின் முரண்பாட்டால் உருவானது டவில். 1899-ஆம் ஆண்டு எல்லைக் கோடு நேராக வரையப்பட்டதால், அதுவரை நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்து இரண்டு பகுதிகளை யார் வைத்திருப்பது என்ற சிக்கல் ஏற்பட்டது. யாரும் வசிக்க முடியாத பிர் டவில் பகுதி தங்களுக்கு வேண்டாம் என எகிப்து அறிவித்துவிட்டது. வரைபடத்திலும் அதைச் சேர்க்கவில்லை. சூடானும் அதற்கு உரிமை கோரவில்லை. 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட அந்த நிலப் பரப்பில் மக்கள் வாழ முடியும் என்றாலும், நெடுங் காலமாக பூச்சிகளும், பாம்புகளும் மட்டுமே அங்கு வசித்து வருகின்றன. உலகத்திலேயே மக்கள் வாழத் தகுந்த, அதே நேரத்தில் எந்த நாடும் உரிமை கோராத ஒரே பகுதி இதுதான்.
இந்த பகுதியை தனி நபர்கள் பலர் இதற்கு முன்பு உரிமை கோரியிருக்கிறார்கள். 2011-ஆம் ஆண்டில் ஜேக் ஷெங்கர் என்பவர் இந்தப் பகுதிக்குச் சென்று ஒரு கொடியை நாட்டி விட்டு, அந்தப் பகுதி தமக்கே சொந்தம் என அறிவித்தார். 2014-ஆம் ஆண்டு ஜெரேமியா கீட்டன் என்ற அமெரிக்கர் இந்தப் பிராந்தியத்தை வடக்கு சூடான் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இவை எதுவும் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. இப்போது இந்தியாவைச் சேர்ந்த சுயாஷ் தீட்சித் பிர் டவில் பகுதியை, தனது நாடு என்று அறிவித்திருக்கிறார். உண்மையில், இரு நாட்டு எல்லையை ஒட்டிய இந்தப் பகுதி, எப்போதும் ஆயுதமேந்திய வீரர்களின் கண்காணிப்பில் இருக்கிறது. அதனால் புதிய நாடாக அந்தப் பகுதியை அறிவிப்பதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.