ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தெளிவற்ற போர் தந்திரம் காரணமாக வளைகுடா கூட்டாளிகள் அதிருப்தியில் உள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் உலக எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம், எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரானின் பதிலடி அச்சம் ஆகியவை அதிகரித்துள்ளன. கத்தார், சவூதி போன்ற நாடுகள் இராஜதந்திரத் தீர்வை வலியுறுத்த, டிரம்ப் தாக்குதலுக்கும், பேச்சு வார்த்தைக்கும் தயாராக இருக்கிறார்.
செய்தியாளர் - M.மீரா
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் முறை தெளிவாக இல்லாததால், வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீடித்து வரும் மோதல் தங்கள் நாடுகளின் பாதுகாப்பையும், முக்கிய எரிசக்தி கட்டமைப்புகளையும் அச்சுறுத்துவதாக வளைகுடா நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
‘The wall street journal வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானுடனான மோதல் நீடிப்பதால் வளைகுடா நாடுகளின் பொறுமை குறைந்து வருகிறது. ஈரானின் பதிலடி தாக்குதல்களுக்கு தாங்கள் இலக்காகக்கூடும் என்பதால், கூடுதல் வான் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்களை இந்த நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த விவகாரத்தில் முக்கியமான பிரச்சினையாக இருப்பது ஹார்முஸ் ஜலசந்தி. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறுகிறது.
இந்த பாதை தொடர்ந்து முடக்கப்பட்டால், எண்ணெய் விலை மட்டுமல்ல... உலக பொருளாதாரமே கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முயற்சித்து வருகின்றன.
ஆனால், வளைகுடா நாடுகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை.ஐக்கிய அரபு அமீரகம், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் சவூதி அரேபியாவும் கத்தாரும், போர் தீவிரமடைவதை விரும்பவில்லை.
போர் நீடித்தால், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால், போர் நிறுத்தம் மற்றும் இராஜதந்திரத் தீர்வையே இந்த நாடுகள் வலியுறுத்துகின்றன.
இதற்கிடையே, டிரம்பின் அணுகுமுறையிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. ஒருபுறம் ஈரானுக்கு எதிராக கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் டிரம்ப்மறுபுறம், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பையும் திறந்து வைத்திருக்கிறார்.
மேலும், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் டிரம்புடன் பேசி, பதற்றத்தைத் தணிக்க இராஜதந்திர வழிகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கியமாக, ஈரானின் எண்ணெய் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் , வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
அதனால், “ஈரானை வீழ்த்துவதா? அல்லது மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதா? என்பது டிரம்பின் முடிவில் இருக்கிறது.