உலகம்

குரங்கு அம்மை காற்றில் பரவுகிறதா? - WHO சொல்வது என்ன?

JananiGovindhan

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் முழுவதுமாக விடுபடாத வேளையில் ஆப்பிரிக்காவில் தோன்றிய குரங்கு அம்மை என்ற monkey pox நோய் தற்போது உலகின் 29 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 29 நாடுகளில் சுமார் ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசியுள்ள அவர், குரங்கு அம்மை பாதிப்பு கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாகவும், நோய் தாக்கத்திற்கு ஆளானவர்கள் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வரும் வேளையில் குரங்கு அம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், குரங்கு அம்மை பாதிப்பால் இதுகாறும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் தடுப்பு நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இப்போதைக்கு பெரியம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியே குரங்கு அம்மை நோய்க்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த குரங்கு அம்மை நோய் காற்றில் பரவுகிறதா என்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள கொப்புளங்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதன் மூலம், இந்த வைரஸ் பரவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.