உலகம்

”கொரோனா தொற்று இன்னும் விலகவில்லை; மீண்டும் ஆபத்து..” - உலக சுகாதார அமைப்பு

சங்கீதா

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிந்து விடவில்லை, அதன் ஆபத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இரண்டு வருடங்களுக்கும் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமிக்ரான் மேலாக உலகை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பல அலைகளாக கொரோனா உருவாகி வரும்நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை உலக அளவில் குறைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரியில் இருந்து முதல் முறையாக கடந்த வாரத்தில் உலக அளவில் 8 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 7 முதல் 13 வரையான வாரத்தில் மட்டும் உலக அளவில் ஒரு கோடியே 10 லட்சம் புதிய கொரோனா தொற்றுகள் ஏற்பட்டிருப்பதாகவும், 43 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது.

தென்கொரியா, சீனா உள்ளிட்ட மேற்கு பசிபிக் மண்டல நாடுகளில் தொற்று 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் உயிரிழப்புகள் 27 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவின் 10 நகரங்கள் பொதுமுடக்கத்தில் இருப்பதே கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்பதை உணர்த்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஜனவரி முதல் இதுவரை உலகம் முழுவதும் 48 கோடியே 38 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக கருதி பரிசோதனைகளைக் குறைத்த சில நாடுகளிலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.