உலகம்

'SRM to Twitter'.. ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்-கிற்கு உதவும் சென்னை பையன்! யார் இவர்?

Abinaya

பெரும் போராட்டத்துக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் டிவிட்டரை வாங்கி இருக்கும் எலான் மஸ்க், நிர்வாக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்களை செய்துவருகிறார். மேலும் பல மாற்றங்கள் செய்ய இருப்பது குறித்து அவ்வப்போது தனது ட்விட் மூலம் பல டிவிஸ்ட் வைத்து பேசி வருகிறார். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பிறகு அதிகம் பேசப்பட்ட பெயர் ஸ்ரீராம் கிருஷ்ணன். எலான் மஸ்க் டிவிட்டரில் கொண்டு வரவிருக்கும் புதிய மாற்றங்களை செய்யும் பணியில் இணைந்துள்ளார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.

இதுகுறித்து ஸ்ரீராம் கிருஷ்ணன்,  ‘உலகின் மிகவும் முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிறுவனமாக டிவிட்டரை நான் பார்க்கிறேன். மஸ்க், அதை நிச்சயம் செய்து காட்டுவார். எலான் மஸ்க் மற்றும் சில சிறப்பான மனிதர்களுடன் இணைந்து டிவிட்டருக்கு தற்காலிகமாக உதவி செய்து வருகிறேன்’ கூறியுள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தவர். தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னை SRM இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் ஐடி முடித்து , 21 வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இவருடைய மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியை, யாஹூ மெசஞ்சர்-ல சந்தித்துத் திருமணம் செய்துகொண்டார்.


தற்போது கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து வரும் ஹாரோவிட்ஸ் (a16z) நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார். தற்போது எலான் மஸ்கிற்கு உதவிக்கொண்டே a16z நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். டிவிட்டர்க்கு முன்பு, மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ஸ்னாப் சாட், ட்விட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்வேறு விதமான முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார். கிரிப்டோகரன்சி குறித்து தனது யூடியூப் சேனலில் தகவலை பகிர்ந்து வருகிறார். மனைவி ஆர்த்தி உடன் இணைந்து பாட்காஸ்ட்களையும் ஹோஸ்ட் செய்து வருகிறார்.