உலகம்

தீவிர வலதுசாரி, நெதன்யாகுவின் 'பழைய தளபதி'..- இஸ்ரேல் புதிய பிரதமர் நஃப்தாலி பென்னட் யார்?

webteam

தீவிர வலதுசாரி, நெதன்யாகுவின் 'பழைய தளபதி' என்று பரவலாக அறியப்படும் இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமர் நஃப்தாலி பென்னட் யார் என்பது தொடர்பாக சற்றே விரிவாக பார்க்கலாம்.

இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிபெற்று புதிய பிரதமராக நஃப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். 120 இடங்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 8 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி 60 எம்பிக்கள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே சுழற்சி முறையில் பிரதமர் பதவி வகிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி யமினா கட்சித் தலைவர் நஃப்தாலி பென்னட் இஸ்ரேலின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

யார் இந்த நஃப்தாலி பென்னட்?

இஸ்ரேலின் ஹைஃபா நகரில் பிறந்தவர் இந்த நஃப்தாலி பென்னட். என்றாலும் இவரின் பெற்றோர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். பின்னாளில் இஸ்ரேல் இவர்களின் சொர்க்க பூமியாக மாற, இங்கேயே தங்கினர். பெற்றோர்களை போலவே இஸ்ரேலை நேசித்தவர் இந்த நஃப்தாலி பென்னட். அவரின் நேசத்துக்கு எடுத்துக்காட்டுதான் ராணுவப் பணி. தனது 18 வயதில், இஸ்ரேல் ராணுவத்தில் சேர்ந்த பென்னட் ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக இஸ்ரேல் ராணுவத்தில் மேஜர் உள்ளிட்ட பதவிகளில் பணிபுரிந்தவர், பின்னர் அதிலிருந்து விலகினார்.

காரணம், விட்டுப்போன தனது படிப்பை தொடர்வதற்காக ராணுவத்தில் இருந்து விடுவித்துக்கொண்டார். 1996-ல், ஜெருசலேம் எபிரேய பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றாலும், பென்னட்டின் தொழில் வாழ்க்கை, தொழில்நுட்ப துறையாக இருந்தது. புகழ்பெற்ற மோசடி தடுப்பு மென்பொருள் நிறுவன நிறுவனமான சியோட்டாவின் நிறுவனர் இவர்தான். பின்னாளில் ஆர்எஸ்ஏ செக்யூரிட்டி இன்க் என மாறிய இந்த நிறுவனம்தான், இவரை ஒரு பில்லியனராக மாற்றியது.
2005-ஆம் ஆண்டில் யு.எஸ். அடிப்படையிலான ஆர்எஸ்ஏ செக்யூரிட்டிக்கு 145 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. பின்னர் சோலூடோ என்ற மென்பொருள் ஸ்டார்ட் அப், நிறுவனத்தை நடத்தியவர் அதனை ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் 130 மில்லியன் டாலருக்கு விற்றார்.

பென்னட்டின் அரசியல் வாழ்க்கை - நெதன்யாகுவுடனான தொடர்பு:

இஸ்ரேலின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தாலும், தனது தொழில் வாழ்க்கைக்கு விரைவாகவே முழுக்குப் போட்டார் பென்னட். தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற மறுநாளே, பென்னட் அரசியல் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். பென்னட் அரசியலில் நுழைந்தபோது, அப்போது இஸ்ரேல் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் பெஞ்சமின் நெதன்யாகு. அவரின் லிக்குட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தான் முதன்முதலாக, அரசியலில் அடியெடுத்து வைத்தார் பென்னட்.

2006 முதல் 2008 வரை லிக்குட்டின் தலைமைத் தளபதியாக நெதன்யாகுவின் நெருங்கிய நண்பராக பணியாற்றி வந்தார். இந்தக் காலகட்டத்தில் பல்வேறு விதமான பதவிகளில் திறம்பட பணியாற்றி நெதன்யாகு மத்தியில் நல்லப் பெயர் வாங்கிய நிலையில் அடுத்தடுத்த காலகட்டங்களில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, 2012-இல் லிக்குட் கட்சியில் இருந்து விலகி, யூத ஹோம் கட்சியில் சேர்ந்தார். பின்னாளில் லிகுட் கட்சியுடன் பென்னட் தலைமையில் யூத ஹோம் கட்சி கூட்டணி அமைத்து இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறியது. இதனால், 2013-2015 முதல் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராகவும், மத சேவை அமைச்சராகவும், பின்னர் 2015-2019 வரை கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார் பென்னட். ஆனால், 2019 தேர்தலில் இவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. எனினும் அடுத்த 11 மாதங்களுக்கு பிறகு நடந்த தேர்தலில் எம்பியாக தேர்வானார்.

இஸ்ரேல் அரசியல் தலைவர்கள் வலதுசாரி சிந்தனை கொண்ட மனிதராக பேசப்படுபவர் நெதன்யாகு. ஆனால் அவரையும் தாண்டிய வலதுசாரி சிந்தனை கொண்டவர் இந்த பென்னட். இஸ்ரேலை யூத தேசம்தான் என்று வெளிப்படையாக குரல் கொடுத்து வருபவர். மேலும் சர்ச்சைக்குள்ளான மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம், சிரியன் கோலன் ஹைட்ஸ் ஆகியவை யூத வரலாற்றின் ஒரு அங்கம் என்று எப்போதும் சொல்பவர். மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் 140 குடியேற்ற பகுதிகளில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் யூதர்கள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் பாலஸ்தீனர்களின் முக்கிய கோரிக்கை, இந்த ஆறு லட்சம் யூதர்களை வெளியேற்ற வேண்டும் என்பதுதான்.

இந்தக் கோரிக்கையை நிராகரிப்பதுடன் இந்தப் பகுதிகளில் மேலும் யூதர்களை குடியேற்ற வேண்டும் என்ற கொள்கை கொண்டிருப்பவர் பென்னட். இந்தக் கொள்கைதான் அவரை பிரபலப்படுத்தியது. இதே கொள்கையை முன்வைத்து சர்வதேச ஊடகங்களில் தோன்றி, ஆங்கில மொழியில் வாதங்களை தெளிவாகவும் ஆக்ரோஷத்துடனும் பேசியே இவர் அந்நாட்டில் அரசியல்வாதியாக பிரபலமானார். பாலஸ்தீனர்களுக்கு ஓர் அங்குலம் கூட நிலம் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதுதான் இவரின் வாதம். இப்படி வலதுசாரி கொள்கையில் தீவிரமாக கொண்ட பிரதமராக 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பென்னட் பதவி வகிக்கவுள்ளார்.