ஜோசப் அவோன் எக்ஸ் தளம்
உலகம்

லெபனான் | பதவியேற்ற புதிய அதிபர்.. தேர்வானது எப்படி? யார் இந்த ஜோசப் அவோன்?

லெபனான் நாட்டின் அதிபராக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஜோசப் அவோன் தேர்வாகி உள்ளார்.

Prakash J

லெபனான் நாட்டின் அதிபராக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஜோசப் அவோன் தேர்வாகி உள்ளார். அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜோசப் அவோனுக்கு, பாப்டா நகரில் உள்ள அதிபர் மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்புக்குப் பிறகு, அதிபர் மாளிகைக்குள் சென்று, தனக்கான இருக்கையில் அமர்ந்து, ஜோசப் அவோன் பணிகளை மேற்கொண்டார். 60 வயதான ஜோசப், லெபனான் நாட்டின் அதிபராக பதவியேற்றுள்ள ஐந்தாவது ராணுவ தலைமைத் தளபதியாவார்.

ஜோசப் அவோன்

2022 அக்டோபரில் அப்போதைய அதிபர் மைக்கேல் அவுனின் பதவிக்காலம் முடிவடைந்ததற்குப் பிறகு, லெபனான் நாட்டின் அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது. அதிபரைத் தேர்வு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முயன்றும் அது தோல்வியிலேயே முடிந்தது. இந்த நிலையில்தான் சமீபத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 128 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 99 வாக்குகளைப் பெற்று அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், அயோன்.

யார் இந்த ஜோசப் அயோன்?

லெபனானின் பெய்ரூட்டின் வடக்கு புறநகர்ப் பகுதியான சின் எல்-ஃபிலில் 1964ஆம் ஆண்டு பிறந்த அவோன், அந்நாட்டு ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற சமயத்தில் பிரபலமானார். 1983ஆம் ஆண்டு ராணுவப் பணியில் சேர்ந்த அவர், 2017ஆம் ஆண்டு அந்த தளபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே, ISIL (ISIS) போராளிகளைப் போரில் வீழ்த்தினார். ராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் அவர், லெபனானின் போர் பதக்கங்களை மூன்றுமுறை பெற்றுள்ளார்.

2023இல் இஸ்ரேலுக்கும் - ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது லெபனான் நாட்டைச் சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஆனாலும், அப்போது அவோன், லெபனான் நாட்டு ராணுவத்தைப் போரிட வைக்கமால் தடுத்து வைத்தார். மேலும், இந்த விஷயத்தில் ஹிஸ்புல்லா பின்வாங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதன் காரணமாகவே அந்நாட்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். தொடர்ந்து அதிபர் தேர்தலின் வேட்பாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார்.