கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டிலும் வரும் செப்டம்பருக்குள் 10 சதவிகிதம் பேருக்காவது தடுப்பூசியை செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச இந்திய கருத்தரங்கம் நிகழ்ச்சிக்காக காணொலி மூலம் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம், பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பது குறித்து கவலை தெரிவித்தார். தடுப்பூசிகள் கிடைப்பதில் பரவலாக ஏற்றத் தாழ்வுகள் நிலவுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுவதாக கூறினார்.
சில நாடுகளில் அதிகபட்ச அளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், பல்வேறு நாடுகளில் சுகாதார பணியாளர்கள், முதியோர்களுக்கு கூட தடுப்பூசிகள் கிடைக்காத நிலையே தொடர்வதாக வேதனை தெரிவித்தார். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 10 சதவிகிதம் பேருக்காவது தடுப்பூசியை செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.