உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா தரும் நிதியை நிறுத்தி வைத்திருக்கும் முடிவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனாம் கூறியுள்ளார்.
கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவரும், டொனால்ட் ட்ரம்ப் நிதியை நிறுத்தி வைத்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா அளித்து வந்த நிதி மற்ற நாடுகளுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஆப்ரிக்கா, மத்திய அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தொடக்க நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் நீண்ட காலம் நீடிக்கப்போகும் ஒரு தொற்றாக இருப்பதால் அமெரிக்க நிர்வாகம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் டெட்ராஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.