உலகம்

குரங்கம்மை அச்சம்: உடலுறவு கொள்வதை தவிர்க்கவும் - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

JananiGovindhan

குரங்கம்மை நோயால் ஆண்களுக்கே அதிகளவில் பாதிப்பு உள்ளது. இதனால் பாலுறுவு கொள்வதை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்கியுள்ள குரங்கம்மை நோய்க்கு இதுவரை அந்நாட்டில் 15,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உயிரிழப்புகள் ஏதும் நிகழாமல் இருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த குரங்கம்மை நோய் பரவியிருக்கிறது. இந்த குரங்கம்மை நோய், தோலோடு தோல் தொடுவதன் மூலம் பரவுவதாகவும், நோய் தாக்கம் உள்ளவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிக்கும் போது பரவுவதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், உடலுறவு கொள்வதன் மூலம்தான் அதிகளவில் குரங்கம்மை நோய் பரவுவதாக வெளியாகியுள்ளதாகவும், வேறு எந்த வகைகளிலெல்லாம் பரவுகிறது என ஆய்வில் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவை போல குரங்கம்மை எளிதில் பரவக் கூடிய நோயாக இல்லாவிட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு அளவு பெரியதாகவே இருக்கிறது எனவும் எச்சரிக்கின்றனர். ஏனெனில் குரங்கம்மைக்கு வரும் புண்கள் வலிமிகுந்ததாக இருக்கின்றனவாம். காய்ச்சல், உடல் வலி, குளிர், சோர்வு, கொப்பளங்கள் போன்ற அறிகுறிகளாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஆகவே, குரங்கம்மை நோய் அறிகுறிகள் உடையவர்கள், நோய் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரையும் கண்டறிந்து போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.