உலகம்

"போரை நடத்த பணம் இன்றி நிதி சிக்கலில் தவிக்கிறது புடின் அரசு" - அமெரிக்க வெள்ளை மாளிகை

Sinekadhara

உக்ரைனில் போரை தொடர முடியாத அளவுக்கு ரஷ்யா கடுமையான நிதி சிக்கலில் தவிப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 40ஆவது நாளை தொட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி செய்தியாளர்களை சந்தித்தார். ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் அந்நாடு பெரும் சிக்கலில் தவிப்பதாக ஜென் சாக்கி கூறினார். பணவீக்கம் 15 சதவிகிதமாக அதிகரித்துள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சி 15 சதவிகித சரிவை கண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி கூறினார். ரஷ்யாவில் செயல்பட்டு வந்த வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் வெளியேறி வருவதாகவும் ஜென் சாக்கி தெரிவித்தார். இதுபோன்ற காரணங்களால் போர் நடத்துவதற்கான தினசரி செலவுகளை கூட சமாளிக்க முடியாத நிலையில் புடின் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையே அதிநவீன ஏவுகணை தடுப்பு கட்டமைப்பை வாங்க உக்ரைனுக்கு 750 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் ஆயுதங்கள் வாங்க அமெரிக்கா அளித்துள்ள தொகையின் மதிப்பு 18 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. உக்ரைனிலிருந்து தப்பி மெக்சிகோவுக்கு வந்த 400 அகதிகள் அமெரிக்காவிற்குள் செல்வதற்காக அனுமதி கேட்டு முகாம்களில் தங்கியுள்ளனர். உக்ரைனிலிருந்து மேலும் பலர் மெக்சிகோவுக்கு வந்து கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.