elon musk x page
உலகம்

அமெரிக்கா | மஸ்க், ட்ரம்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. வெள்ளை மாளிகை கொடுத்த ‘ஷாக்’ விளக்கம்!

”அமெரிக்காவின் DOGE துறைக்கும் எலான் மஸ்க்குக்கும் எந்த தொடர்புமில்லை” என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Prakash J

அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது.

இதன்மூலம் பணிநீக்கம், நிதி ரத்து உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் எலான் மஸ்க்கிற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் போராடி வருகின்றனர். மறுபுறம் இவ்விவகாரம் தொடர்பாக அங்குள்ள நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

elon musk

இந்த நிலையில், ”அமெரிக்காவின் DOGE துறைக்கும் எலான் மஸ்க்குக்கும் எந்த தொடர்புமில்லை” என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை கூட்டாட்சி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ’அமெரிக்காவின் DOGE துறைக்கும் எலான் மஸ்க்குக்கும் எந்த தொடர்புமில்லை. அமெரிக்காவின் அரசாங்க செயல்திறன் துறை என்பது அதிபரின் நிர்வாக அலுவலகத்தின் ஓர் அங்கமாகும். அத்துறை சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் எலான் மஸ்க்கிற்கு இல்லை. அவர், அதிபரின் மூத்த ஆலோசகராக மட்டுமே பணியாற்றுகிறார்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டதைத் தொடர்ந்து, அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.