price of gold is falling, the price of silver has increased Reuters
உலகம்

தடாலடியாக வீழ்ந்த தங்கம் : இனி வெள்ளியின் ஆதிக்கம்தானா?வரும் காலத்தில் என்ன நடக்கும்?

தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.

Praveen Joshva L

தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ₹2,232 குறைந்துள்ளது. அதே நேரத்தில், தொழில்துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்ததால் அதன் விலை உயர்ந்து வருகிறது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் மற்றும் AI சிப்கள் தயாரிப்பில் வெள்ளியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சத்தைத் தொட்ட நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை பெரிய அளவில், அதாவது சவரன் 2,232 வரை குறைந்துள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவு பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த சில மாதங்கள் இல்லாத அளவு தற்போது உயர்ந்துள்ளதால் அமெரிக்கப் பத்திரங்களின் செய்யப்படும் முதலீட்டின் லாப விகிதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அதில் முதலீடு அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

அதே போல தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சங்களை எட்டியதால், சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்களது தங்கத்தை விற்று லாபத்தைப் பதிவு செய்தனர். தங்கம் விலை குறைவுக்கு இதுவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்துள்ளது.

பொதுவாக தங்கத்தின் விலை குறையும்போது வெள்ளியின் விலையும் சரியும். ஆனால் இப்படி தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தும் வெள்ளியின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தொழில் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது.

சோலார் பேனல்கள் தயாரிப்பு, மின்சார வாகனங்கள் மற்றும் AI சிப்கள் தயாரிப்பில் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தை விட வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சோலார் பேனல்கள், மற்றும் மின்சார வாகனங்கள் மற்றும் AI சிப்கள் தயாரிப்பு துறைகள் வளர்ந்து வரும் துறைகள் என்பதால் வரும் காலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளியின் மதிப்பு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்துக்கு இணையாக வரும் காலங்களில் வெள்ளியின் விலையும் உயரும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.