whatsapp Reuters
உலகம்

வாட்ஸ்அப் கணக்குகள் திடீர் முடக்கம்.. பயனர்களுக்கு நேர்ந்த சிக்கல்.. கூலாய்ப் பதில் சொன்ன நிறுவனம்!

தளத்தை தவறாகப் பயன்படுத்தும் கணக்குகளைக் கண்டறிய முயன்ற வாட்ஸ்அப், சாதாரண பயனர்களையும் தவறுதலாக மதிப்பாய்வில் சேர்த்தது.

PT WEB

செய்தியாளர்; M.மீரா

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், ஏராளமான வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் திடீரென 24 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டு, ‘Account in Review’ என்ற அறிவிப்பு தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், பல பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளில் இந்த அறிவிப்பு திடீரென தோன்றியதாக கூறப்படுகிறது. இதனால் குறுந்தகவல் அனுப்புவது, வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்வது உள்ளிட்ட வாட்ஸ்அப்பின் முக்கியச் சேவைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

whatsapp

கணக்கின் செயல்பாடுகள் மற்றும் பயன்படுத்தப்படும் சாதனங்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கணக்கு வாட்ஸ்அப்பின் விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்பது சரிபார்க்கப்படுவதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாக பயனர்கள் கூறியுள்ளனர்.

வாட்ஸ்அப்பின் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு (Automatic System) மூலம் இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தளத்தை தவறாகப் பயன்படுத்தும் கணக்குகளை அடையாளம் காண்பதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தானியங்கி செயல்முறையின்போது விதிமுறைகளை மீறாத, முறையாகப் பயன்படுத்தப்படும் கணக்குகளும் தவறுதலாக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக வாட்ஸ்அப் ஒப்புக்கொண்டுள்ளது.

whatsapp

இதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை விரைவாகச் சரிசெய்து சம்பந்தப்பட்ட பயனர்களின் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் கணக்கு முடக்கத்தால் பல பயனர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் பணிசார் தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டதாக கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வாட்ஸ்அப்பை அன்றாட வேலை மற்றும் தொழில் சார்ந்த தொடர்புகளுக்கு நம்பியிருக்கும் பயனர்களுக்கு இந்தச் சம்பவம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.