உக்ரைன் - ரஷ்யா முகநூல்
உலகம்

ஜெலன்ஸ்கியை முகத்திற்கு நேராகவே கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர்!

ஜெலன்ஸ்கியை வெளியேற சொன்னது யார்? வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை முகத்திற்கு நேராகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடிய நிலையில், ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே நடந்த பரபரப்பான சந்திப்பில் நடந்தது என்ன என்பதை தற்போது காணலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் போரின்போது நிதி மற்றும் ஆயுதம் வழங்கியதற்கு  உக்ரைனின் அரிய கனிமங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ட்ரம்ப் ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என சாடியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றதால், இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பாக இருந்தது.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையேயான உரையாடல்

ஆனால், இதில் நடந்த விஷயங்களை ஜெலன்ஸ்கியே எதிர்பார்த்திருப்பாரே என்பது சந்தேகமே...

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் டிரம்பின் அணுகுமுறை ‘ராஜதந்திரம்’ என்றும், நன்மைக்காகவே டிரம்ப் இதை செய்வதாகவும் தெரிவிக்க

அப்போது வான்ஸை நோக்கி பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ நான் ஒன்றை கேட்கட்டுமா?...

” கேளுங்கள்..’ என்றார் வான்ஸ்.

உக்ரைன் அதிபர்: ‘ அவர் ( புடின்) உக்ரைனின் பெரும் பகுதியை 2014 கைப்பற்றினார். அந்த சமயங்களிலெல்லாம் அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமா, டிரம்ப், பைடன் இருந்தனர். நல்வாய்ப்பாக இப்போது டிரம்ப்தான் அதிபராக இருக்கிறார். இதை நிறுத்த முயற்சிக்கிறார். ஆனால், 2014 ஆம் ஆண்டு யாரும் இதை தடுக்கவில்லை. அவர் எல்லாவற்றையும் ஆக்கிரமித்தார். எங்கள் மக்களை கொன்றார். இதே போன்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தின், அப்பொழுதும் புதின் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால், அதை மீறி மீண்டும் உக்ரைனை தாக்கினார். பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை. இப்படி இருக்க, எந்த ராஜதந்திரத்தை J D நீங்கள் பேசுகிறீர்கள். எதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?...’

வான்ஸ்: ‘ அமெரிக்க ஊடகங்கள் முன்பு இப்படி நீங்கள் பேசுவது எங்களை அவமதிப்பதை போன்றது.. நீங்கள் எங்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.’

ஜெலன்ஸ்கி: "உங்கள் நாட்டின் மீது எனக்கு எல்லா மரியாதையும் இருக்கிறது. நன்றி. நீங்கள் எப்போதாவது உக்ரைனுக்கு வந்திருக்கிறீர்களா ? எங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளைப் பார்த்தீர்களா? ஒரு முறை வாருங்கள். போரின் போது அனைவருக்கும் பிரச்னை இருக்கும். உங்களுக்கும் கூட இருக்கும். ஆனால், உங்களுக்கு நல்ல கடல் இருக்கிறது. நீங்கள் அதை இப்போது உணர மாட்டீர்கள். ஆனால், வருங்காலத்தில் இதுகுறித்து நீங்கள் உணருவீர்கள். உங்களுக்கு எதுவம் வராமல் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. ’

உடனே கோபமடைந்து பேசிய ட்ரம்ப், ‘நாங்கள் என்ன உணர போகிறோம் என்று நீங்கள் கூறாதீர்கள். நாங்கள் பிரச்னையை தீர்க்கவே முயல்கிறோம். அமெரிக்காவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட ஆதரவுக்கு நீங்கள் நன்றியுடன் நடந்து கொள்ளவில்லை. 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் முடிந்திருக்கும்.
ரஷ்யா உடனான போரில் உக்ரைன் வெல்லப்போவதில்லை. உங்களது நாடு ஆபத்தில் இருக்கிறது. நீங்கள் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களுடன் சூதாடுகிறீர்கள். நீங்கள் மூன்றாம் உலகப் போரை தொடங்கப் பார்க்கிறீர்கள். இங்கு வந்து இப்படி பேசுவது எங்கள் நாட்டை அவமதிக்கும் செயல் .’ என்று கடுமையாக சாடினார்.

இதன்படி, உக்ரேனியர்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள், ராணுவ வீரர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது என கூறிய ட்ரம்ப், அமெரிக்கா உக்ரைனுக்கு உதவியதற்காக நீங்கள் நன்றியுள்ளவராக இருக்க வேண்டுமெனவும், ஆனால் நீங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறாய் எனவும் கடுமையாக சாடினார்.

இதனைத்தொடர்ந்து, ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார். ஜெலன்ஸ்கி தானாகவே வெளியேறியதாக அமெரிக்க அரசு தரப்பு கூறினாலும், தொலைக்காட்சிகளிடம் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரிகள், அமெரிக்க துணை அதிபரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் ஜெலன்ஸ்கியை வெளியேற சொன்னதாக தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப்:

இதனிடையே, ட்ரம்ப் தனது சமூக வலைதளப்பக்கத்தில், அமெரிக்காவை ஜெலன்ஸ்கி அவமதித்துவிட்டதாகவும், அவர் அமைதிக்கு எப்போது தயாராகிறாரோ அப்போது வரலாம் எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றியுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, ஜெலன்ஸ்கியை ட்ரம்பும், ஜே.டி வான்ஸும் தாக்கமால்விட்டது அதிசயம் என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர்

இதனிடையே, எக்ஸ் பக்கத்தில் ட்ரம்பிற்கும், அமெரிக்காவிற்கும் நன்றி தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு நீடித்த அமைதியே தேவை என தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவுமா ?, இல்லை முழுமையாக கைகழுவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.