டெஸ்லா கார்கள் pt web
உலகம்

சரிவையும் தாக்குதலையும் எதிர்கொள்ளும் டெஸ்லா கார்கள்.. காரணம் என்ன?

சமீபகாலமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்கள் விற்பனையில் சரிவைச் சந்தித்து வருவதுடன், தாக்குதலையும் எதிர்கொண்டுள்ளது.

Prakash J

அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். உலகம் முழுவதும் தனது வணிகத்தைப் பரப்பிவரும் எலான் மஸ்க், விரைவில் இந்தியாவில் கால் பதிக்க உள்ளார். இந்த நிலையில், சமீபகாலமாக அவருடைய டெஸ்லா கார்கள் பற்றிய விஷயங்கள் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா விதித்திருக்கும் அதிக வரிகள் காரணமாக டெஸ்லாவின் சந்தை விற்பனை சரிவைச் சந்தித்து வருகிறது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முக்கிய ஆதரவாளராக மாறியதால், சில மின்சார கார் வாடிக்கையாளர்கள், எலோன் மஸ்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மின் வாகனங்களை வாங்க மறுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மறுபுறம், DOGE அமைப்பில் அதிரடி காட்டிவரும் எலான் மஸ்க்கால் அவருடைய இமேஜை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், அவரது நிறுவனங்களையும் கூட கடுமையாகப் பாதிக்கிறது. குறிப்பாக, டெஸ்லா கார் ஷோரூம்கள் முன்னால் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், #TeslaTakedown என்ற முழக்கத்தோடு டெஸ்லா கார்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

டெஸ்லா

இந்தச் சூழலில்தான் இதற்கிடையே டெஸ்லாவுக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குரல் கொடுத்துள்ளார். டெஸ்லா கார்களை தாக்குவோர் சிறையில் தள்ளப்படுவார்கள் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர், "எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை குறிவைத்துத் தாக்கும் பயங்கரவாத நபர்களுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைப்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒருவேளை, அவர்கள் எல் சல்வடாரில் உள்ள சிறைகளுக்குக்கூடச் செல்லக்கூடும். எல் சல்வடார் சிறைகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை" என்று பதிவிட்டிருந்தார். மேலும், எலான் மஸ்கின் டெஸ்லா பங்குகள் மதிப்பு சுமார் 50% வரை சரிந்துள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் வைத்து டெஸ்லா காரை வாங்கி ட்ரம்ப் தனது வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். மேலும், டெஸ்லா பங்குகளிலும்கூட முதலீடு செய்யலாம் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, டெஸ்லா மின்சார கார்களின் யூரோப்பிய விற்பனை ​2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே 49 சதவீதம் குறைந்துவிட்டதாக யூரோப்பிய கார் உற்பத்தியாளர்கள் சங்கம் (ACEA) வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 49 சதவீதம் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீன நிறுவனமான ‘பி.ஒய்.டி’ டெஸ்லாவுக்கு கடும் போட்டியாக உருவெடுத்திருப்பதுடன் சீன சந்தைகளில் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சியுள்ளது.