சிரியா போர் எக்ஸ் தளம்
உலகம்

மீண்டும் தொடங்கிய சிரியா யுத்தம்| ஓங்கும் கிளர்ச்சிப் படைகளின் கை.. என்ட்ரி கொடுத்த ரஷ்யா, ஈரான்!

சிரியாவில் தற்போது உள்நாட்டுப் போர் தீவிரமெடுத்துள்ள நிலையில், அலெப்போ நகரை கிளர்ச்சி படை கைப்பற்றியுள்ளது.

Prakash J

ஓங்கும் கிளர்ச்சிப் படைகளின் கை

சிரியாவில் தற்போது உள்நாட்டுப் போர் தீவிரமெடுத்துள்ள நிலையில், அலெப்போ நகரை கிளர்ச்சி படை கைப்பற்றியுள்ளது. இது, அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான இந்த எதிர்பாராத தாக்குதலால் தற்போது சிரியா ராணுவம் நிலைகுலைந்துள்ளது. இத்லிப் நகரை குறிவைத்து கிளர்ச்சி படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் அரசு படைகளின் வசமுள்ள டமாஸ்கஸ் நகரை நோக்கியும் அவர்கள் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இது அரசு படைகளுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில்தான் ரஷ்யாவின் உதவியை சிரியா அரசு எதிர்பார்த்திருந்தது. ரஷ்யா உக்ரைனுடன் போர் புரிந்துவருகிறது. இதனால் ரஷ்யா உதவி செய்யுமா என்ற பெரிய கேள்வி எழுந்தது.

ஈரானும், ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவு

உக்ரைன் உடனான போரையெல்லாம் புறம்தள்ளிவிட்டு சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு, ரஷ்யா உதவி செய்து வருகிறது. அதுபோல் ஈரானும் ஆதரவுக் கரம் நீட்டி உள்ளது. ஈரான் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது போர் தொடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. என்றாலும் இந்த இரு நாடுகளும் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு தேவையான போர் உதவிகள் வழங்குவதாக உறுதியளித்திருந்தன.

அதன்படி, கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து ரஷ்யா போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சிரியா உள்நாட்டுப் போரால், கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் போரில் குறைந்தபட்சம் 602 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிரியா உள்நாட்டுப் போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா சொல்வது என்ன?

இதுகுறித்து அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன், ”சிரியா ஆட்சிக்கு எதிராக மோதலை தொடங்கி உள்ள அமைப்பு, உலகின் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேவேளையில் ரஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லா ஆதரவுடன் பஷர் அல் அசாத்தின் அரசு சில அழுத்தங்களைச் சந்திக்கிறது. அதுபற்றி நாங்கள் கவலைகொள்ள தேவையில்லை. தற்போதைய சூழல் என்பது சிக்கலான நிலை. சிரியாவில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்துவருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்தொடர்பு செயலாளரான மேஜர் ஜெனரல் பட் ரைடர், ”சிரியாவின் வடமேற்கு நகரான அலெப்போவில் நடக்கும் விஷயத்தில் அமெரிக்கா எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இது பயங்கரவாதி என அடையாளம் காட்டப்பட்ட ஹயாத் தாஹிர்அல் ஷாம் எனும் அமைப்பின் மூலம்தான் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.ச்

சிரியா யுத்தம் தொடங்கியது எப்போது?

2011ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போர், 2016-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டது. போர் தொடங்கி கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த சண்டை, மோதல் நீடிக்கும் நிலையில் உருவாகியுள்ளது. இப்போது, பலவீனமாக உள்ள அரசாங்கத்தை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் முக்கியக் கூட்டாளிகள் மற்ற மோதல்களால் திசை திருப்பப்படுகிறார்கள். அதிகாரத்தைத் தக்கவைக்க, வன்முறை மற்றும் அடக்குமுறையை அசாத் ஆட்சி ஏவி விடுவதாலேயே அங்கு மோதல் வெடிக்கிறது. இதன் காரணமாகவே, கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முக்கியமான காரணமே, அங்கு ஒருபோதும் முழுமையாகத் தீர்க்கப்படாத பிரச்னைகள்தான். சிரியாவைப் பொறுத்தவரை அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றாலும் அவர்களுக்கு இடையே ஷியா, அலாவி, சன்னி உள்ளிட்ட பிரிவுகள் இருந்தன. ஆனால் பெரும்பான்மை சன்னிக்களை புறக்கணித்துவிட்டு, சிறுபான்மையினரான அலாவிகளே ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அதிபர் ஆசாத்தும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான். வேலைவாய்ப்புகளில் அலாவி பிரிவினருக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுத் தொடர்ந்தது. இதையடுத்து, பெரும்பான்மை சன்னி பிரிவினர் தொடங்கிய புரட்சி, பின்னர் ஆயுதக் கிளர்ச்சியாக உருவெடுத்தது.