Fly dubai Reuters
உலகம்

நடுவானில் பரபரப்பு.. அடுத்தடுத்த அவசர அழைப்புகள்.. 14,000 அடி சரிந்த விமானம்.. நடந்தது என்ன?

இதனால் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் சுமார் 14,000 அடிக்கு 30 விநாடிகளுக்குள் திடீரென சரிந்ததாக Flightradar24 தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் Flydubai விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானிளுக்கு இடையே நடந்த உடல் மோதலைத் தொடர்ந்து அவசரமாக சவூதி அரேபியாவுக்கு திருப்பிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் சுமார் 150 இஸ்ரேலிய பயணிகள் இருந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Flydubai Flight FZ1073 என்ற Boeing 737 விமானம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்டது. ஜோர்டான் வான்வெளியில் சென்றுகொண்டிருந்தபோது, விமானம் திடீரென தனது பாதையை மாற்றி சவூதி அரேபியாவை நோக்கித் திரும்பியது. அதே நேரத்தில் விமானத்தில் இருந்து அடுத்தடுத்து அவசரநிலை சிக்னல்கள் அனுப்பப்பட்டன.

fly dubai

Flight-tracking இணையதளமான Flightradar24 தகவலின்படி, முதலில் பொதுவான அவசரநிலை சிக்னல் அனுப்பப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தில் சட்டவிரோத தலையீடு அல்லது கடத்தல் இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கும் மற்றொரு அவசரநிலை சிக்னலும் அனுப்பப்பட்டது.

இதனால் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் சுமார் 14,000 அடிக்கு 30 விநாடிகளுக்குள் திடீரென சரிந்ததாக Flightradar24 தெரிவித்துள்ளது. மற்ற flight-tracking ஆய்வுகளில், சுமார் 34,000 அடியில் இருந்த விமானம் 17,000 அடிக்கும் அதிகமாகக் கீழிறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் கடத்தப்பட்டிருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.

இஸ்ரேல் அதிகாரி ஒருவர் Reuters-க்கு தெரிவித்த தகவலின்படி, விமானத்தின் விமானிகள் இருவருக்கும் இடையே உடல் ரீதியான மோதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே அவசரநிலை சிக்னல்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த சிக்னல்களை விமானிகளில் யாராவது வேண்டுமென்றே அனுப்பினார்களா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

இதற்கிடையே, விமானத்தில் பயணித்த ஒரு பயணி தனது உறவினர் ஒருவருடன் பகிர்ந்துகொண்ட தகவலில் விமானத்துக்குள் அலறல் சத்தம் கேட்டதாகவும், கையில் கத்தியுடன் இருந்த ஒருவர் விமானிகளில் ஒருவரை தரையில் தள்ளியதாகவும், அங்கு ரத்தம் காணப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

மேலும், விமானத்துக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படம் ஒன்றை இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்டன. அதில் பயணி ஒருவரின் சட்டையில் ரத்தம் இருப்பது போன்ற காட்சி காணப்பட்டது. அந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மையையும் Reuters உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

விமானம் இறுதியில் சவூதி அரேபியாவின் Tabuk விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக Flydubai தெரிவித்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து வேறு விவரங்களை நிறுவனம் இன்னமும் வெளியிடவில்லை.

சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இன்னும் அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் இல்லை. இந்நிலையில், இஸ்ரேலிய பயணிகள் சென்ற விமானம் சவூதியில் தரையிறங்கியது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பும் நடந்துள்ளது. 2025 செப்டம்பரில் துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற Flydubai விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அவசரமாக தரையிறங்கியதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்திருந்தன