செய்தியாளர் சேஷகிரி
MAGA... இது தான் டிரம்பின் தாரக மந்திரம்... அதாவது MAKE AMERICA GREAT AGAIN... அமெரிக்காவை மீண்டும் மாபெரும் வல்லரசாக்குவோம் என்ற இலக்குடன் ஆட்சியை பிடித்துள்ளார் ட்ரம்ப். தனது இலக்கை எட்ட அவர் பெரிதும் விரும்புவது வணிகப் போரைத்தான். ஆயுதங்கள் தாங்கிய போரை விட வணிகப் போரே ட்ரம்ப்புக்கு பிடித்தமான ஒன்று. 2018இல் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டபோது TRADE WARS ARE GOOD, AND EASY TO WIN எனக்கூறியுள்ளார் அவர்.
பிற நாடுகளால் அமெரிக்கா அடையும் ஆதாயத்தை விட தங்களால்தான் பிறர் அதிக பலன் அடைகிறார்கள் என்பது ட்ரம்ப்பின் கருத்து. அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்களும் இதையே கூறுகின்றன. இந்நிலையில்தான் அமெரிக்காவில் தொழில் வளர்ச்சியை அதிகரித்து பொருளாதார வலிமையை பெருக்க முயல்கிறார் ட்ரம்ப். பிற நாடுகளை வணிக ரீதியில் நிர்பந்தித்து, நெருக்கடிகள் அளித்து தங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பதுதான் ட்ரம்ப்பின் வியூகம். இதற்காக கடந்த 2 மாதங்களாக அவர் வெளியிட்டு வரும் தொடர் அறிவிப்புகள் உலகையே மிரள வைத்துள்ளன என்றால் அது மிகையில்லை... தங்களுக்கு உடன்படாத நாடுகள் மீது வரிகளை அதிகரிப்போம் என கூறியுள்ளார் ட்ரம்ப்.
பொதுவாக பிற நாட்டு பொருட்கள் மீது 10% வரி, சீன பொருட்கள் மீது 50% வரி, கனடா, மெக்சிகோ பொருட்கள் மீது 25% வரி என அடுக்கிக்கொண்டே செல்கிறார் அமெரிக்காவின் அடுத்த அதிபர். இந்தியா உள்ளிட்ட BRICS நாடுகள், டாலருக்கு மாற்று உருவாக்க முயன்றால் அவர்களுக்கு 100% வரை வரி விதிக்கப்போவதாக அதிரடி காட்டியுள்ளார் ட்ரம்ப். ஆனால் இந்த அறிவிப்புகள் இரு முனைக் கத்தி போன்றது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். வெளிநாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதித்தால் அது உள்நாட்டில் விலைவாசியை அதிகரிக்கும் என்கின்றனர் அவர்கள்.
இது மட்டுமல்ல... உலகளவிலும் பொருளாதார தேக்க நிலை ஏற்படும் என எச்சரிக்கிறார் எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் GREGORY DACO. உலகம் தற்போது மிகவும் சுருங்கிவிட்டது. ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது அதிகரித்துவிட்டது. எனவே அமெரிக்காவில் ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள் உலகம் முழுவதும் சாமானியர்களின் வரை தாக்கம் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ட்ரம்ப்பின் அதிரடி நகர்வுகளுக்கு பிற நாடுகள் வைத்துள்ள பதில் என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி