உலகம்

கிம் ஜாங் உன் உயிரிழந்து இருந்தால் அடுத்தது யார் ? வடகொரியாவில் என்ன நடக்கும் ?

கிம் ஜாங் உன் உயிரிழந்து இருந்தால் அடுத்தது யார் ? வடகொரியாவில் என்ன நடக்கும் ?

jagadeesh

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைப் பற்றி‌ பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தகவல்களைச் சுற்றி பின்னப்பட்டு வருகின்றன. 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் இன்னும் உறுதியாக எந்தத் தகவலும் இல்லை. அது பொய்யாகவே கூட இருக்கலாம். ஆனால், அவர் கடந்த சில வாரங்களாக எங்கும் தென்படவில்லை என்பது மட்டும் நிச்சயம். நாட்டின் தேசிய நாள் உள்பட முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு என்ன ஆயிற்று, அவரது உடல் நிலை எப்படியிருக்கிறது, எங்கே தங்கியிருக்கிறார் என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. எல்லாம் புதிர்தான். ஒருவேளை அவர் இறந்து போயிருந்தாலோ, செயல்பட முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ என்னவாகும் என்ற கேள்வி அதிகமாக விவாதிக்கப்படுகிறது.

கிம் ஜாங் உன்னுக்கு இப்போது 36 வயதுதான் ஆகிறது. ஆனாலும் அந்த வயதுக்குரிய உடல்நலம் அவரிடம் இல்லை என்பதை புகைப்படங்கள், விடியோக்கள் மூலமாகவே பார்க்க முடியும். பெரிய தொப்பை, தளர்ச்சியான நடை போன்றவை அவரது உடல் நலத்துடன் இல்லை என்பதைக் காட்டிவிடுகின்றன. கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலையும் முற்றிலும் மறுத்துவிடமுடியாது.

ஒருவேளை கிம்முக்கு ஏதும் நேர்ந்திருந்தால், வடகொரியாவின் அதிகார மாற்றம் யாருக்குச் செல்லும் என்பதில் இதுவரை தெளிவான குறியீடு ஏதும் இல்லை. கிம் ஜாங் உன் தந்தை கிம் சுங் இல் ஆட்சி செய்த போது அடுத்து யார் பதவிக்கு வருவார் என்பதை தெளிவாகத் தெரிந்திருந்தது. அதனால் அவர் இறந்தபோது, கிம் ஜாங் உன் மிக எளிதாக ஆட்சிக்கு வந்துவிட முடிந்தது. தற்போது அடுத்த தலைவர் யார் என்று பேசும் அளவுக்கு கிம் ஜாங் உன்னுக்கு வயதாகிவிடவில்லை என்றாலும், தற்போதைய சூழல் அந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

வடகொரியாவில் அதிகாரத்துக்கு பல தரப்பினர் போட்டியிடும் நிலை வந்தால், உள்நாட்டுக் குழப்பம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. கிம்மின் தங்கை கிம் யோ ஜோங், இரண்டாம் நிலைத் தலைவராக காட்டப்பட்டாலும், முப்பத்து இரண்டே வயதான அவரால், அதிகாரத்தைக் கைப்பற்றுவது இயலுமா என்று கேள்வி எழுகிறது. ஒரு பெண்ணை வடகொரியா தலைவராக ஏற்குமா என்று சந்தேகமும் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வடகொரியாவின் அணு ஆயுதங்களும், கண்டம் தாண்டும் ஏவுகணைகளும் யாருடைய கைக்குச் செல்கிறதோ அவரே அதிகாரம் மிக்க தலைவராக உருவெடுக்க முடியும். அந்தச் சூழலில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அணு ஆயுதக் குழப்பத்துக்கு உலகம் செல்லக்கூடும்.

கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் முதலில் களத்தில் குதிப்பது சீனாதான். கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவைச் சிகிச்சை நடப்பதாகவும், அதற்காக சீனாவில் இருந்து மருத்துவர்கள் சென்றிருப்பதாகவும் சில தகவல்கள் வருகின்றன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சீனா ஏற்கெனவே காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டதாகவே பொருள். அதிபர் ஸி ஜின்பிங் தலையிடும் பட்சத்தில் ஆசியாவின் பூகோள அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். அப்படியொரு மாற்றத்தை, அமெரிக்காவும் ஜப்பானும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பது இன்னொரு மிகப்பெரிய குழப்பத்துக்கு இட்டுச்செல்லும்.