ஆஸ்திரேலிய மக்களுக்கும், அதானிக்கும் இடையேயான பிரச்னைகளையும், இந்தியாவின் எஸ்.பி.ஐ வங்கியை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராடுவதன் பின்னணியும் இதோ...
சரியாக நவம்பர் 30 2018-ல் ஆஸ்திரேலியாவில் ஏறத்தாழ 15,000 பள்ளி மாணவர்கள் பள்ளிகளைப் புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். இதேபோன்று ஒரு போராட்டம் 8 நாள்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் வீதிகள் எங்கும் நடந்தது. இந்த முறை மாணவர்களுடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டத்தில் களம் கண்டனர். இந்த இரண்டு போராட்டங்களிலும் அவர்கள் எதிர்த்தது இந்தியாவின் பிரபலமான `பிசினெஸ்மென்', இந்திய பிரதமர் மோடியின் ஊர்க்காரரும், நண்பருமான அதானியைதான். ஆஸ்திரேலியா அரசின் உத்தரவுடன் அதானி, குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்ட இருக்கிறார். இதனை எதிர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது.
ஆனால், இந்தப் போராட்டங்கள் இப்போது தீவிரமடைந்துள்ளது. ஆஸ்திரேலியா அரசின் உத்தரவுடன் அங்கு நிலக்கரி சுரங்கம் தோண்ட இருக்கும் அதானியின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்துக்கு 1 பில்லியன் டாலர்களை கடனாகக் கொடுக்க ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முன்வந்திருக்கிறது என்கிற தகவல்தான் இப்போது போராட்டங்கள் உச்சம் பெறுவதற்கான காரணம். இதனால் அதானிக்கும், எஸ்பிஐ வங்கிக்கும் எதிராக வீதிகளில் இறங்கியுள்ளனர் மக்கள். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் மைதானத்திலேயே பதாகைகளை ஏந்தி இருவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புறக்கணித்த உலக வங்கிகள்!
அதானியின் நிறுவனம் தனது நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக எஸ்பிஐ வங்கியை அணுகியது கடைசியாகத்தான். இதற்கு முன் ஆஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தின் மூலமும், அந்த நாட்டின் வங்கிகள் மூலமும் தன்னுடைய நிலக்கரி சுரங்கத்துக்கான தேவையான நிதியை திரட்ட முயற்சித்தது. ஆனால், இதில் இரண்டிலும் தோல்வியே கிடைத்தது. காமன்வெல்த் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா (Commonwealth Bank of Australia), ஏ.என்.செட் (ANZ), வெஸ்ட்பாக் (Westpac) மற்றும் என்.ஏ.பி (NAB) என ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகள் அனைத்தும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அதானி நிறுவனத்தை புறக்கணித்தன.
ஆனாலும் முயற்சியை கைவிடாத அதானி, உலக வங்கிகளை நம்பினார். பார்கிலேஸ் (Barclays), ஜேபி மோர்கன் (JP Morgan), ஹெச்எஸ்பிசி (HSBC), பிஎன்பி பரிபாஸ் (BNP Paribas), சிட்டி பேங்க் (Citi bank), ஆர்பிஎஸ் (RBS), மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley) போன்ற உலகின் நிறுவனங்களும் அதானி திட்டத்துக்கு கடன் கொடுக்க முன்வரவில்லை. இப்படி அதானிக்கு கடன் கொடுக்க மறுத்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே 89. இந்த அனைத்து நிறுவனங்களும் அதானியின் திட்டத்தை புறக்கணித்துக்கு மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் காரணங்களைத் தாண்டி, இந்த திட்டத்தில் பொருளாதார சாத்தியக்கூறு இல்லை என்பதினால்தான்.
இப்படி 89 நிறுவனங்கள் புறக்கணித்த திட்டத்துக்குதான் இந்தியாவின் எஸ்பிஐ வங்கி 1 பில்லியன் டாலர்கள் கடன் கொடுக்க முன்வந்துள்ளது. இந்தக் கடனை வழங்கக் கூடாது என்று வலியுறுத்திதான் எஸ்பிஐ வங்கிக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள் போராடி வருகின்றனர்.
இந்தக் கொரோனா காலகட்டத்திலும் பல கட்டுப்பாடுகளுடன் போராட்டங்களை மிகப்பெரிய அளவில் முன்னெடுத்து வருகின்றனர். எஸ்பிஐ கடன் கொடுப்பதாக செய்திகள் வெளியாகி 48 மணி நேரத்துக்குள் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
சிட்னி, மெல்போர்னில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை அலுவலகங்களின் எதிரிலும், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் கோவாவிலும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு குரல்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா மட்டும் இன்றி நியூஸிலாந்து, அமெரிக்கா என இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, பருவநிலை மாற்றம் பாடாய்படுத்தி வரும் நிலையில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த நிலக்கரி சுரங்கம் தேவையா என்பதே போராட்டக்கார்களின் கவலையாக இருக்கிறது.
"ஒருவேளை இந்த நிலக்கரி சுரங்கம் செயல்பட்டால், 120 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவதோடு, நீராதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், பவளப்பாறைகளுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்படும். காலநிலை மாற்ற நெருக்கடியில் உலகம் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற விளைவுகள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரிய அச்சமாக இருக்கிறது" என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையெல்லாம் தாண்டி 'உலகின் 89 பெருநிதி நிறுவனங்கள் புறக்கணித்த ஒரு திட்டத்துக்கு, முழுக்க முழுக்க இந்திய மக்களின் பணத்தில் இயங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 6,200 கோடி) வரை கடன் கொடுப்பது ஏன், ஏற்கெனவே மல்லையாவுக்கு கொடுத்த ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்க முடியாத அனுபவம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு இருக்கும் நிலையில், மீண்டும் அதேபோன்ற ஒரு ரிஸ்க்கை ஏன் எடுக்கிறது?' என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன.