உலகம்

ட்ரம்ப்பை 'அகற்ற' அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச்சட்டம் பயன்படுத்தப்படுமா?

webteam

டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியதுமே ட்ரம்ப்புக்கு எதிராக அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச்சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. இந்தச் சட்டப்பிரிவு குறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை உறுதி செய்யும் இறுதிகட்ட நடவடிக்கையாக தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, சான்றிதழ் வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. கடைசியாக வந்த தகவல் படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, இம்மாதம் 20-ம் தேதி அவர் பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சான்றிதழ் வழங்கும் கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் ஒடுக்க முயற்சித்ததால் மோதல் மூண்டது. தொடர்ந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து செனட் கூட்டம் மீண்டும் தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை துணை அதிபர் மைக் பென்ஸ் கொண்டுவந்தார்.

அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய அமெரிக்க கேபிடல் கட்டிடத்தை டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்கிய உடனேயே, ட்ரம்ப்புக்கு எதிராக அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது சட்டத் திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது சட்டப்பிரிவு சொல்வது என்ன?

இந்த சட்டப்பிரிவு, ஒரு அமெரிக்க அதிபரும், துணை அதிபரும் எவ்வாறு வெற்றி பெறலாம் அல்லது மாற்றப்படலாம் என்பதைக் குறிப்பிடுகிறது. விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால், கார்னெல் சட்டப் பள்ளியின் கூற்றுப்படி, "25-வது திருத்தம் என்பது அதிபரின் அலுவலகத்தைப் பற்றி தொடர்ந்து வரும் சில சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும். அதாவது, அதிபரின் மரணம், நீக்குதல் அல்லது ராஜினாமா குறித்து என்ன நடக்கிறது, சில காரணங்களால் அதிபர் தனது பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத அளவுக்கு முடக்கப்பட்டால், பின்பற்ற வேண்டிய வழி என்ன?" என்பன போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

இந்த சட்டப்பிரிவில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் கூற்றுப்படி, முதல் பிரிவின்படி பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் உயிரிழக்க நேர்ந்தால், அவரின் மரணம் பாரம்பரியமுறைப்படி அனுசரிக்கப்படுவதோடு, துணை அதிபர் என்பவர் அதிபராக மாறமுடியும். ஆனால், இவரைத் தவிர மற்றவர்கள் பதவி விலகவேண்டும். திருத்தத்தின் இரண்டாவது பிரிவு, துணை அதிபர் அலுவலகத்தில் உள்ள காலியிடங்களை நிவர்த்தி செய்கிறது.

திருத்தத்தின் மூன்றாவது பிரிவு, அதிபரின் அதிகாரங்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கான திறனை நிர்ணயிப்பதற்கான முறையான செயல்முறையை முன்வைக்கிறது. அதிபரால் அவரது இயலாமையை அறிவிக்க முடிந்தால், துணை அதிபரே செயல் தலைவராக பொறுப்பேற்கிறார். அதிபரால் அவரது திறமையின்மையை அறிவிக்க முடியாவிட்டால், திருத்தத்தின் நான்காவது பிரிவு துணை அதிபரையும், அமைச்சரவையும் கூட்டாக இதைக் கண்டறிய வேண்டும், அவர்கள் அவ்வாறு செய்தால், துணை அதிபர் உடனடியாக செயல் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறார். 25-வது திருத்தத்தின் இந்த நான்காவது பிரிவுதான் துணை அதிபர் பென்ஸை அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக பயன்படுத்துமாறு பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சட்டப்பிரிவு எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

அதிபர் ஜான் எஃப்.கென்னடியின் படுகொலைக்குப் பின்னர், 25-வது திருத்தம் ஜூலை 6, 1965 அன்று காங்கிரஸால் முன்மொழியப்பட்டது, மேலும் பிப்ரவரி 10, 1967 அன்று மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட்டது. 1970 காலகட்டத்தில் வாட்டர்கேட் ஊழல் விவகாரத்தின்போது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. வாட்டர்கேட் ஊழல் மற்றும் அதில் கிடைக்கப்போகும் தண்டனை காரணமாக அப்போதைய அதிபர் ரிச்சர்ட் நிக்சன் இந்த விதியின் கீழ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட அதிபர் இவர் ஒருவரே ஆவார். இருப்பினும் அப்போது 25-வது திருத்தத்தின் நான்காவது பிரிவு ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. இதுவரை இந்த நான்காவது பிரிவு பயன்படுத்தப்படவில்லை.

ட்ரம்ப்புக்கு எதிராக இச்சட்டப்பிரிவு பயன்படுத்தப்படுமா?

அதிபர் பணிக்கு மிகவும் ஆபத்தாக இருப்பவர்களின் மீதும் 25-வது சட்டத் திருத்தத்தின் 4-வது பிரிவை அமல்படுத்தலாம் என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பைடன் பதவியேற்க இன்னும் 14 நாட்கள் உள்ளன. அதற்குள் ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்றால் இந்தச் சட்டத்தை பயன்படுத்த வேண்டி வரும்.

அதிபர் ட்ரம்ப்பால் பணிகளைத் திறம்பட செயல்படுத்த முடியவில்லை என்று கூறி, அவரை பதவியிலிருந்து நீக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ட்ரம்பின் அமைச்சரவை சகாக்கள் முடிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் 25-வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்த முடியும். அப்போது அதிபர் பதவியில் இருந்து ட்ரம்ப் அகற்றப்படுவார். பைடன் பதவியேற்கும் வரை பென்ஸ் செயல் அதிபராக இருப்பார். இந்தச் சட்டதிருத்தத்தை எதிர்க்க ட்ரம்ப்புக்கு உரிமை இருக்கிறது. தன்னால் மீண்டும் அதிபர் பணியை கவனிக்க முடியும் என ட்ரம்ப் தீர்மானம் போட்டு, அதற்கு பென்ஸ் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் ட்ரம்ப் மீண்டும் அந்த 14 நாட்கள் அதிபராக இருக்கலாம்.

கேபிடல் சண்டையை தொடர்ந்து அமெரிக்காவின் சட்ட வல்லுநர்கள் பலர் 25-வது சட்டத்திருத்தை பயன்படுத்தி, ட்ரம்ப்பை பதவியை விட்டு அகற்ற வேண்டும் என வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கேற்ப செனட்டிலுள்ள அமைச்சர்களும் இதுதொடர்பாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

- மலையரசு