பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களைத் துல்லியமாக அழித்தது. இந்த தாக்குதலில் 100 பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கிப் போரைத் தொடங்கியது. இதை இந்தியா வழிமறித்து அழித்தது. இதனால் இருதரப்பிலும் போர் தீவிரமாய் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலுக்கு ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ் (Operation Bunyan al-Marsoos) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பெயரானது இஸ்லாமியர்களில் புனித நூலான குரானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள கட்டுரையில், “ ‘கடினமான உலோகத்தால் செய்யப்பட்ட கேடயம் போன்ற சுவர் அல்லது கட்டமைப்பு’ எனப் பொருள். மேலும், அல்லாஹ் தனது பாதையில் அணிவகுத்துப் போருக்குச் செல்பவர்களை உண்மையாக நேசிக்கிறான். அவர்கள் ஒரு வலுவான கட்டமைப்பைப்போல திடமான உறுதி கொண்டவர்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.