இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர்
இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் pt web
உலகம்

Exclusive: அக்டோபர் 7 ஆம் தேதி என்ன நடந்தது? இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் சிறப்புப் பேட்டி

Angeshwar G

இஸ்ரேலில் இருந்து தினந்தோறும் பாய்ந்து வரும் ராக்கெட்டுகள் காஸாவில் உள்ள கட்டடங்களை துளைத்தெடுத்து வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கில் இறப்புகள் பதிவாகும் நிலையில் பல நூறு பேர் காயமடைந்து வருகின்றனர். இத்தனை தாக்குதலுக்கு பின்னும் பிழைத்திருப்பது பெரும் அதிசயம் என காசா மக்கள் கூறுகின்றனர். ஆனால் எப்படியோ தப்பிப்பிழைத்து விட்டாலும் உணவு, எரிபொருள், மருத்துவ சிகிச்சைகள் இன்றி தினசரி அணுஅணுவாக தாங்கள் இறந்து வருவதாக ராக்கெட் தாக்குதலில் பிழைத்திருப்பவர்கள் விரக்தியுடன் கூறுகின்றனர்.

இஸ்ரேல்

காஸாவில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் இறந்தவர்களின் சடலத்தை இடுகாட்டுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கழுதை பூட்டிய வண்டியில் உடல்களை இடுகாடுகளுக்கு கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. காஸாவிற்குள் எரிபொருளை எக்காரணம் கொண்டு அனுமதிக்க கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியுடன் உள்ளது. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு பதில் தங்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஹமாஸ் பயன்படுத்தும் என்பதால் எரிபொருளை அனுப்பக்கூடாது என்பதில் இஸ்ரேல் திட்டவட்டமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் போர் சூழல் குறித்து அந்நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆர்யேவுடன் நமது சிறப்புச்செய்தியாளர் கார்த்திகேயன் நடத்திய உரையாடலை காணலாம்

அக்டோபர் 7ஆம் தேதி என்ன நடந்தது?

ஆயிரக்கணக்கான ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்தனர். அவர்கள் ஆயுதங்களால் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் என 130 பேர் கொல்லப்பட்டனர். வீடுகளுக்கும் தீ வைத்தனர். அக்காட்சிகளை நீங்கள் இங்கு பார்க்க முடியும்

ஹமாசிடம் எத்தனை பிணைக்கைதிகள் இருக்கிறார்கள்?

220 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் குழுவினர் பிடித்து வைத்துள்ளனர். இங்கு நூற்றுக்கணக்கானோரை இப்போது காணவில்லை. அவர்களில் பலர் கடத்தப்பட்டிருக்கலாம். எனவே பிணைக்கைதிகள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது

சீரழிந்து கிடக்கும் கட்டடங்களை உடனே சரி செய்வீர்களா?

கட்டடங்களை சரி செய்வது இப்போதைக்கு சாத்தியமில்லை. சண்டை நின்ற பின்புதான் இவற்றை சரிசெய்ய முடியும். பிணைக்கைதிகள் மீட்கப்படவேண்டும். அக்டோபர் 7 போல் மீண்டும் ஒரு தாக்குதல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்

போர் எப்போது முடிவுக்கு வரும்?

அது பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது. ஹமாசிடம் சிக்கியுள்ள பிணைக்கைதிகளை பாதுகாப்பாக மீட்க வேண்டும். அக்டோபர் 7 தாக்குதலில் தொடர்புள்ளவர்களை அழித்தாக வேண்டும். அதன்பின்புதான் போர் குறித்து எதுவும் சொல்ல முடியும்.