இஸ்ரேல்-காஸா போர் 2 ஆண்டுகளை கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீன் நாட்டை அங்கீகரிப்பதாக பல உலக நாடுகளும் அறிவித்து வருகின்றன. அதன் சமீபத்திய அறிவிப்பு பிரிட்டனிடம் இருந்து வந்தது.
சுதந்திரமான பாலஸ்தீன் நாடு என்கிற கோரிக்கை இன்று நேற்று உருவானது கிடையாது. வரலாற்றில் இஸ்ரேலின் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இருந்து வருகிறது. 1967 ஆம் ஆண்டு அரபு நாடுகளின் கூட்டணிக்கு எதிராக 6 நாட்கள் நடைபெற்ற போரில் இஸ்ரேல் வெற்றிபெற்று பாலஸ்தீனத்தின் பெரும்பான்மையான பகுதிகளை தன்வசப்படுத்தியது. இது கிழக்கில் ஜோர்டான் நதியிலிருந்து மேற்கில் மத்தியதரைக் கடல் வரை நீண்டுள்ளது. போரின் முடிவில், இஸ்ரேல் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
1948ஆம் ஆண்டு சுதந்திரத்தின் போது செயல்பட்டது போல இல்லாமல், புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலிய குடியுரிமையை வழங்க அந்நாட்டு அரசு விரும்பவில்லை. அதற்கு பதிலாக, இஸ்ரேலிய அரசாங்கம் இராணுவ உத்தரவுகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ஆளத் தொடங்கியது.
உதாரணமாக, ஒரு பாலஸ்தீன விவசாயி மேற்குக் கரையில் உள்ள ஒரு யூதக் குடியேற்றத்திற்கு அருகில் தனது ஆலிவ் மரங்களை அறுவடை செய்ய விரும்பினால், அவர்கள் அதற்கு அனுமதி பெற வேண்டும். அல்லது ஒரு காசா தொழிலாளி இஸ்ரேலுக்குள் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு இஸ்ரேலிய அனுமதி தேவை. கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு மசூதி அல்லது தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வது கூட அனுமதி கிடைப்பதை பொறுத்தே அமையும். இதன்பிறகே இந்த கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர பாலஸ்தீன தேசம் என்கிற கோரிக்கைகள் வர தொடங்கியது. இருப்பினும் இஸ்ரேல் அதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆக்கிரமிப்பு பாலஸ்தீன் பகுதிகளில் பாலஸ்தீன கொடிகளை ஏந்தவோ அல்லது முழக்கம் எழுப்பவோ கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தக் கருத்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டிருந்தாலும், பிப்ரவரி 1969 இல் எகிப்தில் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் தனி பலஸ்தீன அரசு அந்தஸ்து அதிகாரப்பூர்வ கோட்பாடாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானம் பாலஸ்தீனத்தில் ஒரு சுதந்திரமான, மதச்சார்பற்ற ஜனநாயக அரசை நிறுவ அழைப்பு விடுத்தது, அதில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அனைவரும் சம உரிமைகளைப் பெறுவார்கள் . அந்த தருணத்திலிருந்து, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனிய போராட்டம் இரட்டை பாதைகளை எடுத்தது: ஒன்று இராஜதந்திர அழுத்தம் மற்றும் மற்றொன்று ஆயுதமேந்திய எதிர்ப்பு.
அதன்பிறகு 1973 அரபு - இஸ்ரேலிய போர், வரலாற்று சிறப்புமிக்க ஓஸ்லோ ஒப்பந்தம் போன்றவற்றின் காலகட்டத்திலும் இந்த தனி பலஸ்தீன அரசாங்கம் கோரிக்கை முன்னிலை பெற்றது. இதுவரை ஐநாவில் உள்ள 193 நாடுகளில் இந்தியா, சீனா உட்பட 150 நாடுகள் வரை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளனர். இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான தனிப்பட்ட ராஜாங்க ரீதியிலான நகர்வுகளுக்கு மட்டுமே பலன் கொடுக்கும் என்றும், சர்வதேச அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக இப்போது பிரிட்டன் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருக்கிறது என்று வைத்துக்கொண்டால் பிரிட்டன் - பாலஸ்தீனம் அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை, தூதரக பலன்கள் போன்றவை மேற்கொள்ள முடியும்.
ஆனால், தற்போதைய பாலஸ்தீனத்தின் இறையாண்மையை மாற்றியமைக்க கூடிய ஒரு நிகழ்வு ஏற்பட வேண்டுமானால் அதற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் முழு ஆதரவு தேவைப்படும். உதாரணமாக பாலஸ்தீனத்தை முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரித்து ஐநாவில் நிரந்தர உறுப்பினர் இருக்கை கொடுக்க வேண்டுமானால், அதற்கு முதலில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் 9 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அவை தவிர்த்து பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் 5 நாடுளில் யாரும் தங்களுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது. அப்படி ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அடுத்து ஐநாவின் பொது அவையில் 3 இல் 2 பங்கு நாடுகளின் ஆதரவு தேவைப்படும்.
தற்போதைய நிலையில் அமெரிக்கா முழுவதுமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் அப்படி ஏதாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் நிச்சயம் தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தும். ஏற்கனவே ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 6 முறை நிறுத்தியுள்ளது. இதனால் உண்மையில் இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என நீண்டகாலமாக பல நாடுகளும் முன்வைக்கும் இருநாட்டு பேச்சுவார்த்தை என்கிற ஒரு நிகழ்வு நடைபெற வேண்டுமானால் அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட அனைத்து நாடுகளும் முன்வந்தால் மட்டுமே சாத்தியம்.