ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை ஐநாவிற்கு எடுத்துச் செல்வோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பிரித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றை உருவாக்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து இதுகுறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “காஷ்மீர் விவகாரத்தை ஐநாவிற்கு எடுத்துச் செல்வோம். மேலும், பாஜகவின் சித்தாந்தால் இந்தியாவில் சிறுபான்மையினர் வஞ்சிக்கப்படுவது குறித்தும் ஐநா சபையில் உலகநாடுகளுக்கு தெரிவிப்போம். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அதை தான் இந்திய அரசு தற்போது செய்துள்ளது. இந்திய அரசின் இந்த முடிவு காஷ்மீரில் நிலைமையை இன்னும் பதட்டமானதாக ஆக்கும். காஷ்மீரிக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதன் மூலம் பாஜக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஐநாவின் தீர்மானம் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.