செய்தியாளர் - M.மீரா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மீண்டும் போர் ஏற்பட்டால், இதுவரை உலகம் பார்த்திராத அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அடுத்தகட்ட தாக்குதல்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பல ஆண்டுகளுக்கு முடக்கிவிடும் என்றும் ஈரான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) விண்வெளிப் பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, மீண்டும் போர் வெடித்தால் இதுவரை பயன்படுத்தப்படாத புதிய ஆயுதங்களை போர்க்களத்தில் இறக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தங்களது ஏவுகணைகள் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பங்கள் உலகின் எந்தப் பகுதியிலும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் F-35, F-18, F-16, F-15 போர் விமானங்கள் உட்பட 260-க்கும் மேற்பட்ட எதிரி விமானங்கள் மற்றும் ட்ரோன்களை வீழ்த்தியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் ஏவுகணை உற்பத்தியை எதிரிகள் கண்காணித்து வருவதாகவும், ஆனால் தங்களது ஆயுத உற்பத்தியை நிலத்தடி பகுதிகளுக்கு மாற்றும் திறன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில கப்பல்களின் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
நவம்பர் 6-ம் தேதி வெளியான 'பைனான்சியல் டைம்ஸ்' செய்தியின்படி, நான்கு கப்பல்கள் கடலுக்கு அடியில் செல்லும் முக்கிய இணையதள கேபிள்கள் அமைந்துள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கப்பல்கள் கடலுக்கு அடியில் உள்ள இணையதள கேபிள்களின் வழித்தடங்களை ஆய்வு செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அவற்றின் உண்மையான நோக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த கேபிள்கள் சேதமடைந்தால் இணையதள சேவைகள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இப்படி ஏவுகணைகள், புதிய ஆயுதங்கள், கடலுக்கு அடியில் இணையதள கேபிள்கள் எனப் பல தளங்களில் ஈரான் தனது எதிர்காலப் போருக்கான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. மீண்டும் போர் வெடித்தால் மத்திய கிழக்கு மட்டுமின்றி உலக நாடுகளும் பாதிக்கப்படுமா என்ற அச்சம் அதிகரித்துள்ளது.