விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகே ஜோகில்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற பெண் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகஅண்டார்டிகா கண்டத்தில் 16 ஆயிரம் அடி உயரமுள்ள மவுண்ட் வின்சன் என்ற சிகரத்தில் ஏறி கடந்த வாரம் சாதனை படைத்தார்.
உலகில் உள்ள 7 கண்டங்களில் 6 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் கடந்த ஒன்றரை வருடங்களில் ஏறி சாதனை படைத்துள்ள முத்தமிழ் செல்வி இன்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் ஏப்ரல் மாதம் 7 வது கண்டமாக வட அமெரிக்க கண்டத்தில் உள்ள மவுண்ட் டெனாலி என்ற உயரமான சிகரத்தில் ஏறி சாதனை செய்ய இருப்பதாகவும், இந்த சாதனையை நிறைவு செய்யும்போது, இந்தியாவில் இருந்து குறைந்த நாட்களில் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலை சிகரங்களை அடைந்த முதல் பெண் என்ற சாதனை கிடைக்கும் என்றும் இயற்கை ஆக்ஸிசன், அண்டார்டிகா கண்டத்தில் கிடையாது அதே சமயத்தில் நாம் உயிர்வாழ இயற்கை நமக்கு கடலையும் மரங்களையும் தந்துள்ளது எனவே அவற்றை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் இயற்கை மாற்றம் அடைவதற்கு முன் நாம் மாற்றம் அடைந்தால்தான் பேரிடர்களை தடுக்க முடியும் என்று கூறினார்.
மேலும் அவர் அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதை தடுக்க உலக வெப்பமயமாதலை தடுக்க கடலை சுத்தமாக வைக்கவும்,மரங்களை நடவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.