மனித நேயத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் அவர் ஜெருசலம் நகரில் அந்நாட்டு பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காலத்தை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றை கடுமையாக எதிர்க்க வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்தார். பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியாவும் - இஸ்ரேலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதான்யாஹூ தனது விருப்பத்தை தெரிவித்தார். முன்னதாக இரண்டாம் உலகப்போரின் போது கொல்லப்பட்ட 60 லட்சம் யூதர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள யாத் வாஷெம் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நினைவு பரிசுகளை அளித்துள்ளார். 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் யூதர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று நினைவு தாமிர தகடுகளை மோடி வழங்கியுள்ளார். கேரளாவில் யூதர்கள் வாழ்ந்தது மற்றும் இந்தியாவில் யூதர்கள் மேற்கொண்ட வர்த்தகம் குறித்த குறிப்புகள் அந்த தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதிபர் ரியூவென் ருவிலினுடனான சந்திப்பிற்குப் பின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, நீர் மேலாண்மை, வேளாண் தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை, விண்வெளித்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. அதுதொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன. டெல் அவிவ் நகரில் யூத இந்தியர்கள் முன் மோடி உரையாற்ற உள்ளார். மும்பை பயங்கரவாத தாக்குதலில் தப்பிய குழந்தை மோஷி ஹால்ட்பெர்க்கையும் அவரை காப்பாற்றிய பெண்ணையும் பிரதமர் மோடி இன்று சந்திக்கவுள்ளார்.