கடும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையில், நிறுவனங்களில் தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொருட்கள் தயாரிப்பில் தேவைப்படும் தண்ணீரின் அளவு எவ்வளவு என்பது குறித்த புள்ளி விவரத்தைப் பார்க்கலாம்.
பொருட்கள் தயாரிப்பில் மட்டுமின்றி அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்களின் பயன்பாடு உள்ளிட்ட தண்ணீரின் அனைத்து பயன்பாடு சராசரி அடிப்படையில் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. கழிவறை டிஷ்யூ காகிதம் ஒன்றுக்கு 2.2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், ஒரு காகித கோப்பைக்கு 8 லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல் தேநீர், காபி, குளிர்பான தயாரிப்பு, தூய்மைப் பணி மற்றும் தனிநபர் குடிநீராக சராசரியாக 8 லிட்டர் தண்ணீர் தேவையாகிறது. ஒரு வெள்ளைத்தாள் தயாரிப்பில் மொத்த தண்ணீர் தேவை 10 லிட்டராகவும், கழிவறை தண்ணீர் தொட்டியை ஒருமுறை அழுத்தினால் வெளியேறும் தண்ணீர் 15 லிட்டராகவும் உள்ளது.
ப்ளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பிற்காக 16 லிட்டரும், ஒரு முழு வாளிக்கு 25 லிட்டரும் தண்ணீர் தேவைப்படுகிறது. வாஷிங் மெஷினில் ஒருமுறை துணி துவைக்க 150 லிட்டரும், பாத்ரூம் ஷவரில் 10 நிமிடத்துக்கு 264 லிட்டரும் தண்ணீர் செலவாகின்றன.
பைப் மூலம் காரைச் சுத்தப்படுத்த 450 லிட்டர் செலவாகும் என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. நிறுவனங்களில் ஒரு கிலோ ஸ்டீல் பொருள் தயாரிப்பில் 260 லிட்டரும், ஒரு கிலோ மக்காச்சோள உற்பத்திக்கு 900 லிட்டர் நீரும் தேவைப்படுகிறது என்பது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் ஒயின் தயாரிக்க 960 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், ஒரு லிட்டர் காபி தயாரிப்புக்கு ஆயிரத்து 120 லிட்டர் தண்ணீர் தேவையாகிறது என்பது பலரும் அறியாத தகவலாக உள்ளது. ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு மட்டும் ஆயிரத்து 900 லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரம் பலரையும் பிரமிக்க வைக்கவே செய்கிறது.