உலகம்

''தமிழகத்திற்கு எப்போதும் தோள்கொடுப்போம்' : வாஷிங்டன் தமிழர்கள்

webteam

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வாஷிங்டன் வட்டார தமிழர்கள் மொய் விருந்து நடத்தி நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், உறவாக வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் சூறையாடி சென்றுள்ளது. ஆறா வடுவாக மாறிய கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு உதவி செய்வதற்காக பழமையான ஒரு வழக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் ‌அமெரிக்கா வாழ் தமிழர்கள்.

மொய் விருந்து மூலமாக நன்கொடைகளைத் திரட்டி அதன் மூலம் கிடைக்கும் நிதியை டெல்டா மக்களுக்கு வழங்க வாஷிங்டனில் உள்ள எய்ம்ஸ் இந்தியா பவுண்டேஷன் என்ற தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனமும், சென்னை எக்ஸ்பிரஸ் என்ற உணவகமும் இணைந்து முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.DINE FOR GAJA என்ற பெயரில் நேற்று நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை எக்ஸ்பிரஸ் உணவகம் ஒருநாள் முழுவதும் அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு இலவசமாக உணவு வழங்கியது. அதன்மூலம் கிடைத்த தொகையை டெல்டா மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வாஷிங்டன் டிசியில் உள்ள தமிழர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உணவருந்தி நன்கொடை அளித்தனர். இதுவரை வேதாரண்யம் பகுதியில் உள்ள ஏழு கிராமங்களில் 650 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் எட்டு கிராமங்களுக்கு உதவி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று விவசாயிகளுக்காகவும், ஜல்லிக்கட்டு பிரச்னைகளுக்கும் வாஷிங்டன் வட்டார தமிழர்கள் ஒன்று திரண்டதாகவும், தமிழர்களின் துன்பத்தில் பங்கெடுத்து என்றுமே அவர்களுக்காக நாங்கள் தோள் கொடுப்போம் என்றும் வாஷிங்டன் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.