செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
'அதெல்லாம் ஒத்துக்கவே முடியாது... ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை ஏத்துக்க முடியாது' என்று சொல்லி அமெரிக்கா ஆரம்பித்த போர் Twist மேல் Twist கொடுத்து இப்போது வேறு ஒரு கட்டத்தில் 'நீயா நானா' என்று இழுபறியாக நீடிக்கிறது. அதுதான் 'ஹார்மூஸ் நீரிணை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது'. இதற்கிடையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருப்பது எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் கதையாகவே இருக்கிறது. ஹர்மூஸில் என்ன நடக்கிறது? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஹர்முஸ் நீரிணையைச் சுற்றி பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை, வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கான முக்கிய கடல்வழிப் பாதையான இந்த நீரிணையை திறக்க முடியாது என தெஹ்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபியக் கடலுடன் இணைக்கும் குறுகிய கடல்வழிப் பாதையே ஹர்முஸ் நீரிணை. உலக அளவில் அமைதியான காலங்களில் கடந்து செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகச் செல்கிறது. இதனால், உலக எரிசக்தி வர்த்தகத்தில் ஹார்முஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த நிலையில், ஓமனுடன் இணைந்து ஹர்முஸ் வழியாக புதிய கப்பல் போக்குவரத்து பாதைகளை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த நீர்வழியை மீண்டும் முழுமையாக திறப்பதற்கு முன்பு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், ராணுவ அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் தற்போது நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே தகவல்கள் பரிமாறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் கூறிய அவர், அந்த மீறல்கள் தொடரும்வரை நேரடி பேச்சுவார்த்தையைத் தொடங்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுடன் வாஷிங்டன் தற்போது மிதமான முறையில் அணுகுமுறையை மேற்கொண்டு வருவதாகவும், பாதி பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். ஈரானின் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அந்நாட்டின் பொருளாதார நிலைமையை அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்குவதும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும் என அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் முகமது பாகர் சோல்கதரும், அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும், ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிரான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், வளைகுடாவில் அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்க வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இதனால், ஹார்முஸ் நீரிணை விவகாரம் அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதலில் முக்கியப் பதற்றப் புள்ளியாக மாறியுள்ளது.
இதற்கிடையே, மத்திய கிழக்குப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை அமெரிக்கப் படைகள் தீவிரமாக அமல்படுத்தி வருவதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையான CENTCOM கூறியுள்ளது. CENTCOM தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், USS Ross உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி நிலவரப்படி, முற்றுகை அமல்படுத்தப்பட்டதிலிருந்து அமெரிக்கப் படைகள் 55 வர்த்தகக் கப்பல்களின் பயணத்தைத் திருப்பியுள்ளதாகவும், 2 கப்பல்களை முடக்கியதுடன், மேலும் 2 கப்பல்களில் ஏறி சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.