பெட்டியில் பூட்டி வைத்திருக்கும் பணம் வளராது...அது எக்காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும். அதை சரியான இடத்தில் முதலீடு செய்தால்தான் பன்மடங்கு பெருகும்... இது சாமானியர்களுக்கு கூட தெரிந்தததுதான். ஆனால் முதலீட்டில் உலக மகா வித்தகரான ஒருவர் கையில் ரொக்கப்பணத்தை வைத்துக்கொண்டு மவுனமாக இருக்கிறார். அவர் யார்... அவரது மவுனத்தின் பின்னணி என்ன இப்போது பார்க்கலாம்.
உலக முதலீட்டாளர்களிலேயே தலைசிறந்தவராக பார்க்கப்படுபவர் வாரன் பஃபேட். உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவர். ஹாத்வே பெர்க்ஷயர் நிறுவனத்தை நடத்தி வருபவர். தற்போது இவர் தன் வசம் உள்ள 334 பில்லியன் டாலர்களை ரொக்கப்பணமாக வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார். இது அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பகுதி என கணிக்கப்பட்டுள்ளது.
எந்த நேரத்தில் எந்த தொழிலில் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கில்லாடி பஃபேட். இவரை பின்பற்றிதான் முதலீட்டாளர்கள் பலரும் முடிவுகளை எடுப்பது வழக்கம். ஆனால் இவரே அண்மைக்காலமாக எந்த பெரிய முதலீடும் செய்யாமல் அமைதியாக இருப்பது உலகளவில் முதலீட்டாளர்களை குழப்பத்தில் தள்ளியுள்ளது. இவரது மவுனம் உலக பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் பல விதமாக மொழிபெயர்க்கப்படுகிறது.
உலகளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை சரிவை பஃபெட் மோப்பம் பிடித்துவிட்டார் அதனால்தான் அமைதி காக்கிறார் என்கிறார் பிரபல முதலீட்டாளரான ராபர்ட் கியோஸகி. வரப்போகும் இந்த சரிவு வரலாறு காணாததாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி என பல பணக்கார நாடுகளில் பொருளாதாரம் மோசமாக நிர்வகிக்கப்படுவதை அவர் அறிந்துள்ளதாகவும் கியோஸகி கூறியுள்ளார்.