jellyfish afp
உலகம்

ஜெல்லி மீன்கள் படையெடுப்பு.. பிரான்சில் அணுமின் நிலையம் மூடல்!

பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கிரேவ்லைன்ஸ் அணு மின் நிலையம், ஜெல்லி மீன்களின் படையெடுப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Prakash J

பிரான்சின் மிகப்பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றான கிரேவ்லைன்ஸ் அணுமின் நிலையம், 900 மெகாவாட் மின்திறனை கொண்டது. இதன்மூலமாக அந்த நாட்டின் கனிசமான மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. வடக்கு பிரான்சில் உள்ள இந்த ஆலை, வடகடலுடன் இணைக்கப்பட்ட கால்வாயிலிருந்து குளிர்விக்கப்படுகிறது. இந்த நிலையில், கிரேவ்லைன்ஸ் அணுமின்நிலைய வடிகட்டி டிரம்களில் ஜெல்லி மீன்கள் பெருமளவில் மற்றும் கணிக்க முடியாத அளவுக்கு நுழைந்ததன் விளைவாக அணுமின் நிலையம் நிறுத்தப்பட்டுள்ளது. டன்கிர்க் மற்றும் கலேஸ் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையில் உள்ள கிரேவ்லைன்ஸைச் சுற்றியுள்ள கடற்கரைகளில், சமீபத்திய ஆண்டுகளில் வெப்பமயமாதல் காரணமாக ஜெல்லி மீன்கள் வருகை அதிகரித்துள்ளன. இதனால், அங்குள்ள நான்கு அணு உலை அலகுகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிரெஞ்சு எரிசக்தி குழுவான எலக்ட்ரிசைட் டி பிரான்ஸ் (EDF) தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மூன்று அணு உலைகள் மூடப்பட்ட நிலையில், மறுநாள் அதிகாலை நான்காவது அணு உலையும் மூடப்பட்டது. எனினும், முழுமையான பாதுகாப்புடன், இதை மீண்டும் தொடங்க குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், நாளை மீண்டும் தொடங்கப்படும் என்றும் EDF தெரிவித்துள்ளது.

அணு மின் நிலையங்களை செயலிழக்கச் செய்யும் தன்மை கொண்டது ஜெல்லி மீன் கூட்டங்கள் என அணு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளிலும் கட்டாயமாக மூடப்பட்டதாகவும், அப்போது கணிசமான பொருளாதார செலவு ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெல்லிமீன் படையெடுப்பு காரணமாக, 2013இல் ஸ்வீடனில் மூன்று நாள் மூடப்பட்டது மற்றும் 1999இல் ஜப்பானில் ஏற்பட்ட ஒரு சம்பவம் மின் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், அவைகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அணு உலைகளை மூடாமல் இருக்கும் வழிகளையும் விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

பசிபிக் வடமேற்கைப் பூர்வீகமாகக் கொண்ட ஆசிய மூன் ஜெல்லிமீன் எனப்படும் ஓர் ஆக்கிரமிப்பு இனம், கடந்த 2020ஆம் ஆண்டு வட கடலில் முதன்முதலில் காணப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கால்வாய்களில் அதிக அளவு விலங்கு பிளாங்க்டன் கொண்ட அமைதியான நீரை விரும்பும் இந்த இனம், சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் மற்றும் அணுமின் நிலையங்களில் இதற்கு முன்பு இதேபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் வெப்பமாக இருக்கும்போது ஜெல்லி மீன்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்வதாகவும், வடகடல் போன்ற பகுதிகள் வெப்பமடைந்து வருவதால், இனப்பெருக்க சாளரம் விரிவடைந்து வருகிறது
டெரெக் ரைட், அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கடல் உயிரியல் ஆலோசகர்
jellyfish

தண்ணீர் வெப்பமாக இருக்கும்போது ஜெல்லி மீன்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்வதாகவும், வடகடல் போன்ற பகுதிகள் வெப்பமடைந்து வருவதால், இனப்பெருக்க சாளரம் விரிவடைந்து வருகிறது எனவும் அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கடல் உயிரியல் ஆலோசகர் டெரெக் ரைட் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், ஜெல்லி மீன்கள் டேங்கர் கப்பல்களிலும் சவாரி செய்யும் எனவும், ஒரு துறைமுகத்தில் உள்ள கப்பல்களின் பேலஸ்ட் தொட்டியில் நுழைந்து பெரும்பாலும் உலகம் முழுவதும் பாதியிலேயே நீரில் வெளியேற்றிவிடும் தன்மை கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதிகப்படியான மீன்பிடித்தல், பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை ஜெல்லிமீன்கள் செழித்து இனப்பெருக்கம் செய்வதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.