E.இந்து
பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் மே 7ஆம் தேதி “ஆப்ரேசன் சிந்தூர்”தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
தொடர்ந்து, 4 நாட்கள் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன. ஆனால், மே 10ஆம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதுமுதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் இந்தியா உடனான போர் நிறுத்தம் குறித்து வெள்ளிக்கிழமை (மே 23) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அப்போது பேசிய ஷஃப்கத் அலி கான், “இந்தியாவுடனான போர் நிறுத்தம் நீடிப்பதாகவும், நாங்கள் அதற்கு முழுமையாக உறுதி பூண்டுள்ளோம். இந்தியா-பாகிஸ்தான் உடனான போரால் ஏற்பட்ட விளைவுகளையும், பிரச்சனைகளையும், பதற்றத்தையும் குறைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும், ராணுவ நடவடிக்கைக்களுக்கான இயக்குநர்கள் மூலம் தொடர்பில் உள்ளோம். போர் நிறுத்தம் என்பது இரு நாடுகளுக்கும் தற்போது தேவைப்படுகிறது” என்று கூறினார்.
மேலும், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை இடைநிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ நாங்கள் நினைக்கவில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் சிந்து நதியின் நீர் நிலைகளில் சரியான பங்கைத் தொடர்ந்து பெறுவது முக்கியமாகும்.
நாங்கள் அதற்காக தொடர்ந்து பாடுபடுவோம். இந்தியாவுடன் போர் நடைபெற்றபோதிலும், பாகிஸ்தான் கர்தார்பூர் வழித்தடத்தை ஒருபோதும் மூடவில்லை. ஆனால், மே 7 ஆம் தேதி முதல் புனித யாத்திரை வசதியை பெற பாகிஸ்தானியர்களை, இந்தியா தரப்பு அனுமதிக்கவில்லை” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர், “ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களுடனும் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, ஆப்கானிஸ்தானுடனான உறவுகளை எப்போது, எப்படி மேம்படுத்துவது என்பதை பாகிஸ்தான் முடிவு செய்யும். பாகிஸ்தானும்-ஆப்கானிஸ்தானும் பல மட்டங்களில் ஒன்றோடொன்று தொடர்பில் உள்ளன. ஆப்கானிஸ்தானுடன் எங்களுக்கு மிகவும் வலுவான தொடர்புகள் இருந்து வருகிறது” என்று கூறினார்.