Strait of Hormuz  X
உலகம்

தீவிரமாகும் போர்?.. ஹார்முஸை திறக்க அமெரிக்காவுக்கு உதவத் தயார்.. களத்தில் குதித்த நாடு!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடையும் என்ற அச்சத்தின் மத்தியில், முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை வலுகட்டாயமாக திறப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் கைகோர்க்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

PT WEB

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு, ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க அல்லது வலுக்கட்டாயமாக திறக்க ஐக்கிய அரபு அமீரகம் உதவத் தயாராகி வருவதாக உயர் அதிகாரிகள் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையிடம் தெரிவித்துள்ளனர். முன்னதாக சவூதி அரேபியா, தெஹ்ரான் தனது நாட்டிற்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்தாவிட்டால் போரில் நுழையும் என்றும் அச்சுறுத்தியிருந்தது. இந்த சூழலில், ஈரான் உடனான போர் மேலும் விரிவடையும் என்று தெரிகிறது.

iran war

ஈரானியத் தாக்குதல்களால் பெரும் பாதிப்பைச் சந்தித்த பிறகு, இந்த மோதலில் தீவிரமாகப் பங்கேற்கும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகம் இறங்கியுள்ளது. தொடர்ந்து, தங்கள் நாட்டின் ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைத் தீர்மானத்திற்காக ஐக்கிய அரபு அமீரகம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

வளைகுடா நாடுகளின் எரிசக்தி ஏற்றுமதி, கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் உணவு விநியோகத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் ஹார்மூஸ் நீர்வழிப்பாதையை வலுக்கட்டாயமாக மீண்டும் திறப்பதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, ஆசியாவில் உள்ள இராணுவ வல்லரசுகள் ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என அமீரகத் தூதர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இல் வெளியான செய்தி கூறுகிறது.

Donald Trump, Mohamed bin Zayed

மேலும், கடல் கண்ணிவெடிகளை அகற்றுவது மற்றும் பிற ஆதரவு சேவைகளை வழங்குவது உட்பட நீர்வழியைப் பாதுகாப்பதில் இராணுவத்தின் பங்கை எவ்வாறு ஆற்ற முடியும் என்பதை ஐக்கிய அரபு அமீரகம் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் கூறியதாகவும் அச்செய்தி கூறுகிறது .

ஐக்கிய அரபு அமீரகத்தின் வியூக மாற்றம் -

ஐக்கிய அரபு அமீரகம் நீண்ட காலமாக ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வந்ததுடன், போருக்கு முன்பு வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யவும் முயன்றது. அந்த இராஜதந்திர முயற்சிகளில், ஈரானின் தேசியப் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் அபுதாபி பயணமும் அடங்கும்; அவர் பின்னர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.

Hormuz from International Space Station

​​குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதில், இராணுவச் சுமையின் பெரும்பகுதியை நட்பு நாடுகள் ஏற்க வேண்டும் என்ற ட்ரம்பின் வலியுறுத்தலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உடன்படுவதாகத் தெரிகிறது. அபு மூசா உட்பட, நீரிணையில் உள்ள முக்கிய தீவுகளை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்துள்ளதாக அரபு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது. சர்ச்சைக்குரிய அந்தத் தீவு ஐக்கிய அரபு அமீரகத்தால் உரிமை கோரப்பட்டாலும், பல தசாப்தங்களாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இஸ்ரேல் உட்பட வேறு எந்த நாட்டையும் விட, ஐக்கிய அரபு அமீரகம் மீது இதுவரை ஈரான் கிட்டத்தட்ட 2,500 ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.