உலகம்

‘வால்மார்ட்’ துப்பாக்கி விற்பனையை நிறுத்த அமெரிக்க மக்கள் கோரிக்கை

webteam

அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதால் துப்பாக்கி விற்பனையை நிறுத்த வேண்டுமென வால்மார்ட் நிறுவனத்துக்கு அந்நாட்டு மக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், எல் பஸோ (EL PASO) என்ற இடத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் நு‌ழைந்த நபர்கள் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டனர். அப்போது, பணியில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். வணிக வளாக தாக்குதல் நடைபெற்று ஒரே நாளுக்குள் மதுபான பாரிலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 

இந்தச் சம்பவங்களை அடுத்து அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அபாயகரமான இடத்தை நோக்கிச் செல்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கி விற்பனையை கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.  புகழ்பெற்ற வால்மார்ட் நிறுவனம் துப்பாக்கி விற்பதை நிறுத்த வேண்டுமென்றும் அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வரும் வால்மார்ட் கடைகள் ஏற்கெனவே துப்பாக்கி விற்பனையில் சில மாற்றங்களை கொண்டு வந்தன. பலரும் எளிதாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி விற்பனையை வால்மார்ட் நிறுத்தியது. 19 வயதான கல்லூரி மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கி விற்பனை இல்லை எனவும் வால்மார்ட் அறிவித்தது. 

இந்நிலையில் துப்பாக்கி விற்பனையை முழுவதுமாக நிறுத்தவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் துப்பாக்கி விற்பனை நிறுத்துவது தொடர்பாக வால்மார்ட் நிறுவனம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.