செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
நாசாவின் வாயேஜர் 1 விண்கலம், பூமியிலிருந்து சுமார் 16 பில்லியன் மைல்கள் (26 பில்லியன் கிலோமீட்டர்) தொலைவிலிருந்து தகவல் அனுப்பியுள்ளது. இந்தச் சிக்னல் பூமியை வந்தடைய சுமார் 24 மணி நேரம் ஆகிறது. மனிதர்கள் உருவாக்கிய ஒரு விண்கலம் இவ்வளவு தொலைவிலிருந்து பூமியுடன் தொடர்புகொள்வது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
1977-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1, கடந்த 49 ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து வருகிறது. இத்தனை ஆண்டு பயணத்துக்கு பின்னர் கடந்த நவம்பர் 18-ம் தேதி வாயேஜர் 1 விண்கலம் ஒரு ஒளி நாள் (One Light-Day) தொலைவைக் கடந்ததாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது. இயற்பியல் விதிகளின்படி பிரபஞ்சத்தில் அதிவேகமாக பயணிப்பது ஒளிதான். இந்த ஒளி ஒரு நாளில், அதாவது 24 மணி நேரத்தில், பயணிக்கும் தொலைவே ஒரு ஒளி நாள் என அழைக்கப்படுகிறது.
ஒரு ஒளி ஆண்டை கடந்த பின்னர் வாயேஜர் 1 விண்கலத்திலிருந்து அனுப்பப்பட்ட ரேடியோ சிக்னல், ஸ்பெயினின் மாட்ரிட் அருகே உள்ள நாசா ஆண்டெனாக்களை நவம்பர் 19 அன்று வந்தடைந்தது. பின்னர் இது குறித்த விவரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெட் புரொபல்ஷன் ஆய்வகத்துக்கு (JPL) தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த 1979-இல் வியாழன் கிரகத்தையும், 1980-இல் சனி கிரகத்தையும் கடந்து சென்ற வாயேஜர் , 1990-இல் புகழ்பெற்ற ‘Pale Blue Dot’ என்ற பூமியின் புகைப்படத்தைப் பதிவு செய்தது. 2012-இல் சூரியனின் காந்தப்புல எல்லை முடிவையும் ஹீலியோபாஸைக் (heliopause) கடந்து, Interstellar Space என அழைக்கப்படும் எல்லையை அடைந்தது.
வாயேஜர் 1 தற்போது மணிக்கு சுமார் 61,000 கிலோமீட்டர் வேகத்தில், 17 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் Gliese 445 என்ற நட்சத்திரத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. சுமார் 40,000 ஆண்டுகளில் அந்த நட்சத்திரத்தை 1.7 ஒளியாண்டுகள் தொலைவில் அது கடந்துசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாயேஜர் 1 பழைய விண்கலம் என்பதால் பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அதன் ஆற்றல் குறைந்து வருவதால், மின்சாரத்தைச் சேமிக்க நாசா படிப்படியாக அதன் அறிவியல் கருவிகளை சுவிட்ச் ஆஃப் (SWITCH OFF) செய்து வருகிறது. தற்போது வாயேஜர் 1-இல் இரண்டு கருவிகள் மட்டுமே செயல்படுகின்றன.
இதற்கிடையே, வாயேஜர் 2 விண்கலமும் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகிறது. தொழில்நுட்பச் சவால்களைத் தாண்டியும், மனிதர்களின் விண்வெளி ஆய்வுப் பயணத்தை இந்த இரண்டு வாயேஜர் விண்கலங்களும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவது அறிவியலின் மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது.