Achraf Hakimi -  Hiba Abouk
Achraf Hakimi - Hiba Abouk Facebook
உலகம்

“Achraf is not my hero! ஏன்னா...”- சர்ச்சைக்குள்ளான கால்பந்து வீரரின் மனைவிக்கு குவியும் ஆதரவு! ஏன்?

ஜெ.நிவேதா

மொராகோவை சேர்ந்த 24 வயதான கால்பந்து வீரர் அக்ரஃப் ஹக்கிமி, கடந்த சில தினங்களாகவே முக்கியமான பேசுபொருளுக்கு உள்ளாகும் ஒருவராக இருக்கிறார் அதற்கு காரணம், அவரது விவாகரத்து.

ஹக்கிமின் அந்த விவாகரத்து குறித்த செய்தியை இங்கே அறிக:

இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஹிபா அபூக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், மனைவி ஹிபா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். மேலும், தமக்கு ஜீவனாம்சமாக கால்பந்து வீரர் ஹக்கிமின் சொத்தில் பாதி வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். மொராக்கோவில் விவாகரத்து பெறும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு அளிக்கும் வகையில் சட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Achraf Hakimi

ஜீவனாம்சம் கோரியபோதுதான், கால்பந்து வீரர் ஹக்கிமி தாம் வாங்கிய சொத்து, வீடு, பணம் , நகை, கார் என அனைத்தும், தமது பெயரில் இல்லாமல் தனது தாயின் பெயரில் பதிந்து வைத்திருக்கிறார் என்று ஹிபாவுக்கு தெரியவந்துள்ளது. கால்பந்து விளையாடி, அதிலிருந்து வரும் பணமும் தாயின் வங்கிக் கணக்கில் தான் வைத்து இருக்கிறார் ஹக்கிமி. அதன்படி தனது 24 மில்லியன் டாலர் சொத்தில், 80 சதவித சொத்தை தன் அம்மாவின் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார். இதனால் ஹக்கிமி பெருமளவு பணம் கொடுப்பதிலிருந்து தப்பித்திருக்கிறார் என சொல்லப்பட்டது.

தொடங்கிய சர்ச்சை...

இந்நிலையில், ‘தாய்ப்பாசத்தால் ஹக்கிமி தப்பித்தார்’ என்று செய்திகளும் வெளியாகின. இதற்கிடையே அவரது  மனைவி மீது விமர்சனங்களும் பலவாறாக வைக்கப்பட்டது. அவற்றில் பலவும், ‘ஹிபா பணத்துக்காகவே ஹக்கிமியுடன் உறவில் இருந்தார் - ஹிபா பணத்தேவை அவருக்கே எதிராய் முடிந்துவிட்டது’ என்றெல்லாம் இருந்தன. இதனால் ஒழுக்கம் சார்ந்தும் விமர்சிக்கப்பட்டார் ஹிபா.

இது தொடர்ந்து வந்த நிலையில் ஹிபா மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி ஹிபாவின் பின்புலங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. அதன்படி ஹிபா சுமார் 2 மில்லியன் டாலர் சொத்தை தன்னிடமே கொண்டிருக்கிறாராம். இவர், ஹக்கிமியை விடவும் 12 ஆண்டுகள் வயதில் பெரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகையான இவர், ஸ்பான்ஸர்ஷிப் மூலமும் நடிப்பின் மூலம் தனக்கான சொத்துகளை தானே சேர்த்துவைத்திருக்கிறார்.

Achraf Hakimi - Hiba Abouk

இந்த விவாகரத்து தொடர்பான சர்ச்சைகள் முதன்முதலில் எழத்தொடங்கியது, கடந்த பிப்ரவரி மாதம்தான். பிப்ரவரியில், ஹக்கிமி பாரீஸில் பாலியல் வன்கொடுமை வழக்கொன்றில் குற்றம்சாட்டப்பட்டார். அந்தநேரத்தில், ஹக்கிமிக்கு ஆதரவாக ஹிபா எந்தவொரு நிலைப்பாடும் எடுக்கவில்லை. இதுவொருபக்கமென்றால், ஹிபாவுக்கு ஹக்கிமி அவரது அம்மாவின் பெயர்களில்தான் சொத்து இருக்கிறதென்றும் கூட தெரியவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஹிபாக்கு 15 மில்லியன் டாலர் கிடைக்கப்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து இணையத்தில் நைஜீரிய மென்பொறியாளர் சார்லஸ் என்பவர் தன் பார்வையை எழுதியுள்ளார். அது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் “இவர்களெல்லாம் சொல்வதுபோல அக்ரஃப் ஹக்கிமி ஹீரோவும் இல்லை, ஹிபா வறுமையில் இருந்துவிட்டு - கணவரின் சொத்துக்கு ஆசைப்படும் மோசமான பெண்ணும் இல்லை.

Hiba Abouk

அவர் ப்ரொஃபஷனல் ஸ்பானிஷ் நடிகை. அவரிடமே போதுமான அளவு பணம் இருக்கிறது. அதனால் அவர் அக்ரஃபின் பணத்தின் பின் ஓடியதே இல்லை. அதனால்தான் அவர் அவருடைய அம்மாவுக்கு பணம் அனுப்பியதை கண்டுகொள்ளாமல் தானே குடும்பத்தை தன் பணத்தில் நிர்வகித்துள்ளார். 2020-ல் ஸ்போர்ட்ஸ்மாப் என்ற தளத்தின் தரவின்படி மிக பணக்கார ஸ்பானிஷ் நடிகைகள் பட்டியலில் ஹிபாவும் ஒருவர்.

ஹிபா, பன்மொழி கலைஞரும் கூட. ஆம் அவரால் ஸ்பானிஷ், அரபிக், ஃப்ரெண்ட்ச், ஆங்கிலம், இத்தாலியன் என அத்தனை மொழிகளையும் சரளமாக பேச முடியும். ஹிபா, அக்ரஃபைவிட 12 வயது பெரியவர். அக்ரஷ், 19 வயதாக இருக்கும்போது இருவரும் சந்தித்தனர். இப்போது அவர் 24 வயது ஆண். இதற்கிடையே அவரது பெரு வளர்ச்சிக்கு, ஹிபாவும் முக்கிய காரணம். அப்படியிருக்கையில், அவர் தன் அம்மாவின் பிள்ளையாக மட்டுமே இருக்கிறார் என்றால் நாம் கற்க எதுவுமே இல்லை.

ஹக்கிமி பாலியல் வழக்கொன்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு என்பது, மிகப்பெரிய குற்றச்செயலாகும். 24 வயதான, ‘அம்மா பிள்ளை’யின் வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையிலுருக்கும்போது... அவருடைய செயலை எடுத்துக்கொண்டு நாம் எப்படி அவரை ஹீரோவாகவும் ரோல் மாடலாகவும் சொல்லமுடியும்? அதை ஏன் செய்கின்றீர்கள்?” என்று சரமாரியாக கேட்டுள்ளார்.

Achraf Hakimi - Hiba Abouk

இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவிலிருந்து பலரும், “நாம் ஏன் ஹிபாவை குறைத்து மதிப்பிட வேண்டும்? விவாகரத்து – ஜீவனாம்சம் போன்றவற்றுக்காக மட்டுமே நடத்தை சார்ந்தும் ஒழுக்கம் சார்ந்தும் குறைசொல்வது சரியில்லைதானே! ஜீவனாம்சம் என்பது, அந்தந்த நாட்டில் பெண்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகள், நிலைப்பாடுகளின்படியே அரசால் விகிதம் அல்லது வேறு அளவுகோலின்கீழ் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒருவேளை அங்கு உள்ள விவாகரத்தாகும் பெண்களின் முடிவைக்கொண்டு அங்கு அச்சட்டம் இருக்கக்கூடும்; அதையே ஹிபா பயன்படுத்தியிருக்கூடும். இதை எப்படி தவறென சொல்லமுடியும்?” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.