சீம்ஸ் நாய்
சீம்ஸ் நாய் balltze instagram
உலகம்

‘GoodBye Cheems..!’ - மீம்ஸ் கிங் மறைவுக்கு நெகிழும் நெட்டிசன்ஸ்!

Prakash J

இன்ஸ்டாகிராமில் சீம்ஸ் என்ற பெயரில் பல ஃபாலோயர்ஸைக் கொண்டிருந்தது, பால்ட்ஸே என்ற நாய். பால்ட்ஸே, தன்னுடைய 1 வயது முதல் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டது. இதன் க்யூட் செயல்கள் யாவும் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வந்த நிலையில், அவை ட்ரெண்டானது.

இதன் தொடர்ச்சியாக அதன் பெயரிலேயே Cheems_Balltze என தனியாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கப்பட்டது. அந்தப் பக்கமும் வைரலானது. 2017ஆம் ஆண்டு ஓர் அழகான புகைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த சீம்ஸ், பின்னர் அதன் குறும்புத்தனமான தோற்றங்களாலும் செய்கைகளாலும் உலகளவில் வைரலானது.

இந்த நிலையில், அந்த சீம்ஸ்க்கு கடந்த ஜூலை மாதம் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அதற்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் நேற்று நடைபெற்ற அறுவை சிகிச்சையின் முடிவில், சீம்ஸின் உடல் சிகிச்சைக்கு பலனளிக்காமல் போனது. இதனால் சீம்ஸ் உயிரிழந்தது. சீம்ஸின் மறைவு செய்தியும், அதன் தனிப்பக்கமான balltze என்ற இன்ஸ்டா பக்கத்திலேயே வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சீம்ஸின் உரிமையாளர், அதன் வலைத்தளத்தில் "யாரும் வருத்தப்பட வேண்டாம். பால்ட்ஸே, உங்களின் உலகிற்குக் கொண்டுவந்த மகிழ்ச்சியை இத்தருணத்தில் நினைவில் வையுங்கள். உங்களையும் என்னையும் இணைக்கும் அளவுக்கு உதவிய சீம்ஸ், கொரோனா காலத்தின்போது பலருக்கு உதவியுள்ளது. உங்களில் பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஆனால் இப்போது அதன் பணி முடிந்தது. சீம்ஸ் தன் வானத்தில் சுதந்திரமாக ஓடிக்கொண்டிருக்குமென நம்புகிறேன்.

அங்கு அதன் புதிய நண்பர்களுடன் நிறைய சுவையான உணவை சாப்பிடும் என்று நான் நினைக்கிறேன். எப்போதும் சீம்ஸ் என் இதயத்தில் இருக்கும். தொடர்ந்து இணையவாசிகளை அது மகிழ்ச்சியாக்க வேண்டுமென்பதே என் விருப்பம்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரல் ஆகி வந்தாலும், சீம்ஸின் மறைவு இணையவாசிகளை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.