உலகம்

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய இந்திய-அமெரிக்க பெண்... யார் இந்த விஜயா கடே?

webteam

அமெரிக்க கேபிடல் கலவரத்தைத் தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக கூறி அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. பின்னர், தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததால் அவரின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து @POTUS என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து ட்ரம்ப் ட்வீட் செய்தார். அந்தப் பதிவுகளையும் ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நிறுத்திவைக்கும் முடிவை எடுத்த குழுவின் தலைவர் விஜயா கடே என்பவர் இந்திய வம்சாவளி பெண் என்பது தெரியவந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் சட்டம், கொள்கை மற்றும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளின் தலைவராக வகிக்கும் விஜயா, நிறுவன உயர் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

விஜயா கடே யார்?

பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தின் தலைநகராக இருந்த ஹைதராபாத்தில் பிறந்தவர் பிறந்த விஜயா கடே ஒரு குழந்தையாக அமெரிக்காவிற்குச் சென்று டெக்சாஸில் வளர்ந்தார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ரிப்போர்ட் செய்துள்ளது. விஜயா தனது 3-வது வயதில் பெற்றோருடன் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

விஜயா கடேவின் தந்தை மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ரசாயன பொறியாளராக பணியாற்றியவர். கடே குடும்பம் கிழக்கு கடற்கரைக்கு குடிபெயர்ந்தது, அங்கு விஜயா தனது உயர்நிலைப் பள்ளியை நியூ ஜெர்சியில் முடித்தார். கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை படிப்பு, நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பு முடித்த விஜயா, 2011 ஆம் ஆண்டில்தான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். அதற்கு முன்பு பே ஏரியாவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது.

ஒரு கார்ப்பரேட் வழக்கறிஞராக விஜயா கடே ட்விட்டர் நிறுவனத்தின் பின்னணியில் அறியப்படாத முகமாக செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது செல்வாக்கு கடந்த பத்தாண்டுகளில் ட்விட்டரை வடிவமைக்க உதவியது. ட்விட்டர் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்தபோது விஜயா ஓவல் அலுவலகத்தில் இருந்தார். மேலும் நவம்பர் 2018-இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது டோர்சியுடன், விஜயாவும் மோடியைச் சந்தித்தார்.

ட்விட்டர் பொறுப்பைத் தவிர, விஜயா கடே ஏஞ்சல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இந்த நிறுவனம் ஒரு முதலீட்டுத் தொகுப்பு நிறுவனமாகும். இது ஸ்டார்ட்-அப்களுக்கு துணைபுரிகிறது. அத்துடன், வெற்றிகரமான நிறுவனங்களில் பெண்களுக்கு சமமான உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.

விஜயா இப்போது மட்டும் கவனம் ஈர்க்கவில்லை. அமெரிக்காவின் சில முன்னணி பப்ளிகேஷன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளி உலகத்தில் அதிகம் அறியப்பட்டார். விஜயாவை, "நீங்கள் கேள்விப்படாத மிக சக்திவாய்ந்த சமூக ஊடக நிர்வாகி" என்று 'பாலிடிகோ' விவரித்துள்ளது. இதேபோல் 'தி இன்ஸ்டைல்' பத்திரிகை `2020 - உலகை மாற்றும் பெண்களை சந்திக்கவும்' என்ற பட்டியலில் விஜயாவை குறிப்பிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

இப்படி பல சாதனைகளை சத்தமில்லாமல் செய்து வரும் விஜயா, சமீபத்தில் ட்ரம்ப் விவகாரத்தில் வெளியே தெரியவர, இந்திய மக்களுக்கும் பரிச்சயமாகியிருக்கிறார்.