உலகம்

வியட்நாமில் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்

வியட்நாமில் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்

webteam

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது சந்திப்புக்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோரது வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையை எடுப்பது குறித்து இருவரும் விரி‌வாக விவாதித்தனர்.  இதனையடுத்து அடுத்த கட்டமாக இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதினார். இதனைதொடர்ந்து, அணு ஆயுதத்தை கைவிடுவதற்கான வழிமுறைகளை வகுப்பது தொடர்பாக இருவரும் வியட்நாம் தலைநகர் ஹனாயில் நாளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்த சந்திப்பையொட்டி, வியட்நாம் தலைநகர் ஹனாயில் அசம்பாவிதங்களை தவிர்க்க எல்லைப் பகுதியில், கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வியட்நாம் வெளியுறவுத் துறை அமைச்சர் லீ ஹவோய் ட்ரங், பத்து நாட்களுக்கு முன்பிருந்தே பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். 


மேலும் இரு தலைவர்களின் பாதுகாப்புக்காக போதுமான அளவுக்கு படைகள் குவிக்கப்பட்டிருப்பதாகவும், சந்திப்பு நடக்கும் ஹோட்டல் பகுதி முழுமையாக பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு அமெரிக்கா, வடகொரியாவுக்கு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை, ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் சம்பந்தப்பட்டது என்பதால், தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றும் லீ கூறினார். இரு நாட்டுத் தலைவர்களையும் வரவேற்கும் வகையில் ஹனாயின் முக்கிய வீதிகளில், அமெரிக்கா மற்றும் வடகொரியா நாட்டின் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.