உலகம்

வியட்நாமில் வரலாறு காணாத சூறாவளி: 35 பேர் உயிரிழப்பு, பல ஆயிரம் வீடுகள் சேதம்

webteam

வியட்நாம் நாட்டில் ஒரே மாதத்தில் வீசிய நான்காவது சக்தி வாய்ந்த சூறாவளி காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றில் வீடுகள் இடிந்தும், கூரைகள் காற்றில் வீசப்பட்டும், வேருடன் மரங்கள் வீழ்ந்தும் பாதிப்பு நேரிட்டுள்ளது. மத்திய பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த இருபது ஆண்டுகளில் வீசிய சூறாவளிகளில் இது மிகவும் சக்திவாய்ந்தது என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழையுடன் வீசிய காற்றால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதுடன், பல நூறு படகுகள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. மேலும், 1.7 மில்லியன் மக்கள் மின்சார வசதியின்றி கிராமங்களில் தவித்துவருகின்றனர்.

சூறாவளி காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் அதிகமான மக்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 89 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக வியட்நாம் அரசு கூறியுள்ளது.